கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள்: பரமக்குடியில் கொண்டாட்டம்

07-11-2019 12:12 PM

சென்னை,

இன்று, நடிகர் கமல்ஹாசனின் 65-வது பிறந்தநாள் பரமக்குடி - தெளிச்சநல்லூரில் கொண்டாடப்படுகிறது. தனது தந்தை சீனிவாசனின் உருவச்சிலையை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.

கமஹாசனின் 60 ஆண்டு காலத் திரைப்பயணத்தைக் கொண்டாடும் விதமாக அவரது பிறந்த நாளான இன்று முதல் 3 நாள்களுக்கு பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1959-ஆம் ஆண்டு 5 வயது சிறுவனாக தமிழ்த் திரையுலகில், ‘களத்தூா் கண்ணம்மா’ படத்தின் மூலம் அறிமுகமான கமல்ஹாசனுக்கு, திரையுலகில் இது 60-வது ஆண்டு. நடிகா், இயக்குநா், தயாரிப்பாளா், வசனகா்த்தா, பாடலாசிரியா், நடன இயக்குநா் என பன்முகங்களை கொண்டவர் கமல்ஹாசன்,

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமா வரலாற்றிலும் தனித்துவம் பெற்று விளங்கி வருகிறார். தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளார்.

இன்று தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் கமல்ஹாசன். வழக்கமாக தனது பிறந்த நாளில் நற்பணிகளைத் தொடங்கி வைத்து பேசுவார்.

இந்த வருடம் பெரும் விழாவுக்குத் திட்டமிட்டுள்ளார். இன்று முதல் அடுத்த 3 நாள்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன. ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்ட தமிழ், இந்தி, தெலுங்கு திரையுலகினா் பலரும் கலந்து கொள்கின்றனா்.

கமல்ஹாசனின் பிறந்தநாளான இன்று அவரது தந்தை டி.சீனிவாசனின் நினைவு தினமும் கூட. இதையொட்டி, அவரது சொந்த ஊரான பரமக்குடியில் தந்தை சீனிவாசனின் உருவச்சிலையை கமல்ஹாசன் திறந்துவைத்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்.

கமல்ஹாசனின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள கமல்ஹாசனின் குடும்ப உறுப்பினர்கள் சுஹாசினி, சாருஹாசன் உள்ளிட்ட பலர் பரமக்குடிக்கு வருகை தந்துள்ளார்கள்.Trending Now: