அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கான எச்.1.பி விசா விண்ணப்பம் அதிகளவு நிராகரிப்பு

06-11-2019 05:51 PM

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளால் இந்திய ஐடி நிறுவனங்களின் எச்-1.பி விசா விண்ணப்பங்கள் அதிகளவு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேஷ்னல் பவுண்டேஷன் பார் அமெரிக்கன் பாலிசி (National Foundation for American Policy) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பணியாளர்களை குறிப்பாக தொழில்நுட்ப திறன் கொண்ட பணியாளர்களை வேலையில் அமர்த்துவதற்காக  அமெரிக்க நிறுவனங்கள் ஆண்டுதோறும் எச்.1.பி விசாவுக்கு விண்ணப்பித்து வருகின்றன.

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு வழக்கப்படும் விசாக்களில் மிகவும் பிரபலமானது எச்.1.பி விசா. இந்த விசா மூலம் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவுக்கு வருகிறார்கள்.

ஆனால் தற்போது இந்தியர்களின் எச்-1 பி விசா விண்ணப்பங்கள் அதிகளவு நிராகரிக்கப்படுவதாக பவுண்டேஷன் பார் அமெரிக்கன் பாலிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு 6 சதவீதமாக இருந்த எச்.1.பி விசா விண்ணப்பம் நிராகரிப்பு தற்போது 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனங்கள் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து பணியாளர்களை வரவழைக்க எச்.1.பி விசாவை தான் அதிகம் நம்பியிருக்கின்றன.

ஆனால் நேஷனல் பவுண்டேஷன் பார் அமெரிக்கன் பாலிசி நடத்திய ஆய்வில் ஐடி நிறுவனங்களின் குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்களின் எச்.1.பி விசா விண்ணப்பங்கள் அதிகளவு நிராகரிக்கப்படுகின்றன. இதன் மூலம் டிரம்ப் நிர்வாகம் இந்திய ஐடி நிறுவனங்களை குறிவைத்து தாக்குவது தெளிவாக தெரிகிறது.

உதாரணமாக, கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள அமேசான், மைக்ரோசாஃப்ட், இன்டெல், கூகுள் ஆகிய நிறுவனங்களில் பணியாற்ற இந்தியர்கள் ஹெச்-1பி விசாவை விண்ணப்பித்தபோது ஒரு சதவீதம் மட்டுமே நிராகரிக்கப்பட்டது.

ஆனால், 2019-ம் ஆண்டில் அமேசான் நிறுவனத்தின் எச்.1.பி விண்ணப்பங்களில் 6 சதவீதம், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு 8 சதவீதம், இன்டல் 7 சதவீதம், கூகுள் 3 சதவீதம் என்ற வகையில் விசாக்கான விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் விண்ணப்பங்களில் 2 சதவீதம் மறுக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக டெக் மகிந்திரா நிறுவனத்துக்குக் 2019ம் ஆண்டில் 41 சதவீத எச்.1.பி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2015-ம் ஆண்டில் வெறும் 4 சதவீதம் எச்-1பி விசா விண்ணப்பங்கள் தான் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 டிசிஎஸ் நிறுவனத்தின் எச்.1.பி விசாவுக்கான விண்ணப்பங்கள் 2015-ம் ஆண்டில் 6 சதவீதம் மறுக்கப்பட்ட நிலையில் தற்போது 34 சதவீதம் மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல விப்ரோ நிறுவனத்துக்கு விசா மறுப்பு அளவு 7 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமும், இன்போசிஸ் நிறுவனத்துக்கு 2 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமும் அதிகரித்துள்ளன.

அசென்ச்சர், கேப்ஜெமினி உள்ளிட்ட 12 நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு நடப்பு நிதியாண்டின் முதல் 3 காலாண்டில் மட்டும் 30 சதவீதம் பேருக்கு எச்.1.பி விசா விண்ணப்ப அளவிலேயே மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை எச்-1பி விசா விண்ணப்ப அளவில் நிராகரிப்பட்டதன் விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் தாண்டியதில்லை. ஆனால், அதிபர் ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல் எச்.1.பி விசா வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகள், புதிய விதிமுறைகளை புகுத்தியுள்ளார்.

அதிபர் டிரம்ப்பின் குடியுரிமை கொள்கையின் முக்கிய நோக்கம் அமெரிக்காவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்ந்த பணிகளில் அதிகம் படித்த திறன் மிக்க வெளிநாட்டினர்கள் பணியாற்றுவதை தடுக்க வேண்டும் என்பது தான் என நேஷ்னல் பவுண்டேஷன் பார் அமெரிக்கன் பாலிசி தெரிவித்துள்ளன.Trending Now: