கண்ணுக்கு மை அழகு!

06-11-2019 04:12 PM

வேலுார், அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில், 1975ல், 10ம் வகுப்பு படித்த போது, தமிழ் ஆசிரியை சாவித்ரி, அடிக்கடி கேள்வி கேட்பார்; அச்சத்தால் பதில் சொல்லாமல், மவுனம் சாதிப்போம்.

ஒருநாள், 'சரியோ... தவறோ, மனதில் பட்டதை தைரியமாக கூற பழகுங்கள்; தவறாக இருந்தாலும் யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள்...' என்று அறிவுரைத்தார். அது உற்சாகம் தந்தது.

பள்ளியில் ஆய்வு செய்த கல்வி அதிகாரி, எங்கள் வகுப்புக்கு வந்த போது, 'கண்களுக்கு எது தேவை...' என்று கேட்டார். சிறிதும் தயங்காமல், 'கண்களுக்கு தேவை கண் மை...' என்று கூறினேன். ஆசிரியை உட்பட, அனைவரும் சிரித்தனர். முதல் மதிப்பெண் பெறும் மாணவி மங்கம்மா, 'கண்களுக்கு தேவை நல்ல கண்ணோட்டம்...' என்று கூறினாள். சபாஷ் போட்ட அதிகாரி, 'கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அதின்றேல் புண்ணென்று உணரப் படும்...' என்ற குறளை கூறினார். நல்ல எண்ணங்கள் தான் கண்ணுக்கு அணிகலன்; அது இல்லாவிட்டால், கண்களை புண்ணாகத்தான் கருத வேண்டும் என்று விளக்கினார். தவறாக இருந்தாலும், தயங்காமல் பதில் சொன்ன என்னையும் பாராட்டினார்.

பின், பல போட்டிகளிலும், நாடகங்களிலும் பங்கேற்று வென்றுள்ளேன். அந்த ஆசிரியை, அன்று ஊன்றிய ஊற்சாக விதையே அதற்கு காரணம். இப்போது என் வயது, 60; மனத்திடத்தை வளர்க்க துாண்டியவரை, இன்றும் மறக்க முடியவில்லை.

–- சி.மன்மதாதேவி, சென்னை.Trending Now: