எண்ணத்தில் உதித்த வண்ணம்!

06-11-2019 04:11 PM

ராமநாதபுரம், சபாநடேச ஐயர் ஆரம்ப பாடசாலையில், 1948ல், 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சுதந்திர தினத்தன்று, தேசியக் கொடியை, சட்டையில் அணிந்து வர, தலைமையாசிரியர் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தார்.

நானும், என் தோழி கமலாவும், கொடி அணிய மறந்து விட்டோம். பள்ளி வளாகத்தில் நுழைந்த பின் தான் நினைவுக்கு வந்தது. காலை, 8:00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றுவர்; வீட்டில் சென்று எடுத்து வரவும் நேரமில்லை.

உடனே, ஒரு யோசனை வந்தது. ஒரு வெள்ளை தாளை, கொடி வடிவத்தில் வெட்டி, அதன் மேல் பகுதியில், நெற்றியில் இட்டிருந்த சிவப்பு சாந்தை தடவினோம். நடுப்பகுதியை வெண்மையாக விட்டோம். இலைகளை பிழிந்து அடிப்பகுதியில், பச்சை வண்ணம் தடவினோம். அவை, சுமாராக இருப்பதாக திருப்தியடைந்து, சட்டையில் அணிந்து கொண்டோம்.

அணி வகுப்பின் போது, என் கொடியைப் பார்த்து, திகைத்து நின்ற தலைமை ஆசிரியர், 'இது என்ன...' என்று கேட்டார். உண்மையை, விளக்கமாக சொன்னேன். கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என பயந்து நின்றோம்.

சிரித்தபடியே, 'பரவாயில்லையே... முயற்சி செய்திருக்கிறாய்...' என்று தட்டிக் கொடுத்தார். தப்பியதால், உயிர் மூச்சு திரும்பி வந்தது.

எனக்கு, 80 வயதாகிறது. அந்த நிகழ்வு, பசுமை மாறாமல், இன்றும் மனதில் உள்ளது.

–- கோமளா, சென்னை.Trending Now: