பறக்கும் போட்டி!

06-11-2019 04:10 PM

கடல் ஓரத்தில் இருந்தது சுந்தரபுரி. அங்கு, காகம் ஒன்றை வளர்த்து வந்தான் சிறுவன் நந்தன். நல்ல சாப்பாடு போட்டதால், 'கொழுகொழு' என வளர்ந்தது காகம்.

அது மிகவும் கர்வத்துடன், 'என்னைப் போல பறக்கும் பறவை, உலகில் எங்கும் கிடையாது' என்று கூறி, இறுமாப்புடன் அலைந்தது.

அந்த ஊருக்கு, பட்டைத்தலை வாத்து போன்ற அன்னங்கள் சில, வலசை வந்தன. நீண்ட துாரம் பறந்து, கடல் கடந்து வந்ததால், மரத்தில் ஓய்வெடுத்தன. அவற்றில் ஒன்றிடம், 'நம் இருவரில், யார் வெகுதுாரம் பறக்கிறோம் என்று போட்டி வைக்கலாமா...' என்றது காகம்.

'வீணாக நமக்குள் ஏன் போட்டி... நாங்க எல்லாரும், வெகுதுாரம் பறக்க வல்லவர்கள்... குஞ்சாக இருந்த போதே, அதற்காக பயிற்சி பெற்றுள்ளோம். இப்போது, நீண்ட துாரத்தில் இருந்து வந்திருக்கிறோம்... சற்று ஓய்வெடுக்கிறோம்...' என்றது அன்னம்.

'ஓய்வா... எவ்வளவு துாரம் பறந்தாலும் எனக்கு களைப்பே ஏற்படுவதில்லை... சாதாரணமாகவே, 100 வகையாக பறப்பேன்; உன்னால் அப்படி எல்லாம் பறக்க முடியுமா...'

'காக்கையாரே... நீர் மிகவும் கெட்டிக்காரர் தான். உம் திறமைக்கு ஈடு இணை ஏதும் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்... எனக்கு, ஒரே வகையில் தான் பறக்க தெரியும்...'

'ப்பூ... இவ்வளவு தானா உன் திறமை... என்னோடு போட்டி போட திறனற்று எதையோ பிதற்றுகிறீர்... வலிமை இல்லாமல் தவிக்கிறீரோ... உன்னை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது...'

'தவறாக நினைக்க வேண்டாம்... வீணாக ஏன் சக்தியை வீணடிக்க வேண்டும் என்று தான் மறுத்தேன். போட்டியில் பங்கேற்பதில் எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை... வாரும், நாம் பறக்கும் போட்டியை நடத்தலாம்... உம் திறமையை நானும் அறிந்து கொள்கிறேன்...' என்றது அன்னம்.

அவை, சமுத்திரத்தின் மீது பறக்க ஆரம்பித்தன.

தெரிந்த வித்தைகளைக் காட்டி, வெகு வேகமாக பறந்தது காக்கை.

ஆனால், அன்னமோ சீராக, மிகவும் நிதானமாக பறந்தது. முதலில், பின் தங்கியிருந்தது. பின், மெல்ல மெல்ல முன்னேறி, காக்கையை முந்தியது.

சமுத்திரத்தின் மீது பறந்து பழக்கமில்லாததால், சிறிது நேரத்துக்குள்ளாகவே, களைப்படைந்து விட்டது காகம். பறக்கும் வேகம் குறைந்ததால், தள்ளாட துவங்கியது. சிறகை அசைக்க முடியாமல் பலவீனமானது. திறன் குறைந்ததால், கடலில் விழும் நிலைக்கு வந்தது.

முன்னேறி பறந்து கொண்டிருந்த அன்னம் திரும்பிப் பார்த்தது.

காகத்தின் திண்டாட்ட நிலையை கண்டதும், பதை பதைத்தது. மனம் இரங்கி, 'ரிங்' என, வட்டம் அடித்து, காக்கை அருகே வந்து, '100 விதங்களில் பறக்க தெரியும் என்று சொன்னீரே... இது என்ன, 101வது விதமா...' என்று கேட்டது.

வெட்கத்தால் தலைகுனிந்த காகம், 'அன்னமே... கடலில் மூழ்கி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது... என்னை காப்பாற்றும்...' என்று கதறியது.

உடனே, காக்கையை முதுகில் ஏந்திய அன்னம், காப்பாற்றி, ஒரு aமரக்கிளையில் இறக்கி விட்டது. கர்வத்தை அழித்து, தகாத செயலுக்கு மன்னிப்பு கேட்டது காகம்.

செல்லங்களே... ஒவ்வொருவருக்கும் தனி திறமைகள் உண்டு. மற்றவரிடம் உள்ள திறமையை மதிக்க வேண்டும். நம் திறமையை, மேலும் வளர்க்க வேண்டும். எல்லாம் தெரியும் என்ற கர்வத்தில் அலைந்தால், காக்கைக்கு ஏற்பட்ட அனுபவம் தான் கிடைக்கும்.Trending Now: