இம்ரான்கான் பதவி விலகும்வரை போராட்டம்: எதிர்க்கட்சிகள் உறுதி

05-11-2019 07:28 PM

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வரும் முற்றுகை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ராணுவத்தின் உதவியோடு முறைகேடு செய்து பொது தேர்தலில் வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தானின் ஜமாத் இ உலிமா இஸ்லாமி ஃபாசில் (ஜே.யூ.ஐ.-எஃப்) என்ற வலதுசாரி கட்சி தலைவர் மவுலானா பஸ்லூர் ரெஹ்மான் தலைமையில் கடந்த வாரம் அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் நவாஸ் ஷெரிப்பின் முஸ்லிம் லீக் கட்சி, பெனசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. 

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த பேரணி லாகூரில் இருந்து கிளம்பி நவம்பர் 1ம் தேதி இஸ்லாமாபாத் வந்தடைந்தது. பேரணி நிறைவடைந்து 4 நாட்களான நிலையில் இஸ்லாமாபாத் வந்த போராட்டக்காரர்கள் தொடர்ந்து அங்கேயே முற்றுகையிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.ராணுவம் தலையீடு இல்லாமல் மீண்டும் பொதுதேர்தல் நடக்க வேண்டும்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.

இந்நிலையில் எதிர்கட்சிகளின் ரெஹ்பார் குழு மற்றும் பாகிஸ்தான் அரசு நியமித்த பாதுகாப்பு அமைச்சர் பெர்வேஷ் கட்டாக் தலைமையிலான குழு இடையே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனால் இருகட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அதனால் இஸ்லாமாபாத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

அரசு பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.யூ.ஐ.-எஃப் தலைவர் அக்ரம் கான் துரானி 

‘‘எதிர்க்கட்சிகள் தங்கள் நிபந்தனைகளில் உறுதியாக உள்ளன. 9 எதிர்க்கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக உள்ளன’’ என்று கூறினார்.

எதிர்க்கட்சிகள் தங்கள் போராட்டத்தை தேசிய அளவில் கொண்டு விரிவு படுத்தவும் திட்டமிட்டுள்ளன.

இதற்கிடையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வது, கைதான அரசியல் தலைவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது ஆகிய 2 நிபந்தனைகளை தவிர்த்து எதிர்க்கட்சிகளின் மற்ற நிபந்தனைகளை ஏற்க பிரதமர் இம்ரான் கான் தயாராக இருப்பதாக எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் பெர்வேஷ் கட்டாக்குடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் இம்ரான் கான் இதை தெரிவித்ததாக எக்ஸ்பிரஸ் டிரிபியூன் தெரிவித்துள்ளது.Trending Now: