சொர்க்கம் சோற்றிலே!

04-11-2019 04:01 PM

உணவை கடவுளாக கருத வேண்டும் என்பதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்கின்றனர். ‘அன்னம் பரபிரம்ம சொரூபம்’ என்பர். இதற்கு ‘சோறே தெய்வம்’ என்பது பொருள். சாப்பாட்டு பிரியர்களைப் பார்த்து ‘அவனுக்கென்ன! சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்று கிண்டல் செய்வதுண்டு. சிவன் கோயிலில் நடக்கும் அன்னாபிஷேகத்தை தரிசிப்பவர் சொர்க்க வாழ்வு பெறுவார் என்பதையே இப்படி கூறினர்.

உடல்நிலை மேம்பட...!

சிலருக்கு உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போகும். என்ன மருந்து சாப்பிட்டாலும் குணமாகாது. உடனே மருத்துவர் உணவுக்கட்டுப்பாடு விதிப்பார். வேத காலத்திலேயே இது இருப்பதை,  ‘யோ புங்தே அஹமேவ பங்தே’ என்னும் ஸ்லோகம் சொல்கிறது.இதற்கு ‘யார் என்னை அதிகம் சாப்பிடுகிறானோ, அவனை நான் சாப்பிடுகிறேன்’ என்பது பொருள். அளவோடு சாப்பிட வேண்டும். சாப்பிடும் முன் ஸ்லோகம், பக்திப்பாடல்களைச் சொல்ல வேண்டும். இஷ்ட தெய்வத்திற்கு உணவை மானசீகமாக நைவேத்யம் செய்ய அது பிரசாதமாக மாறும். அதை சாப்பிட நோய் பறந்தோடும்.

வேர்க்கடலை நைவேத்யம்!

கோயில்களில் சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், தயிர்சாதம், புளியோதரை நைவேத்யம் செய்வர். திருச்சி பூலோகநாதசுவாமி கோயிலில், சேனைக்கிழங்கு, உருளை, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வேர்க்கடலை உள்ளிட்ட பூமிக்கடியில் விளைவதை நைவேத்யம் செய்கின்றனர். வாஸ்து பரிகாரத்தலமான இங்கு வாஸ்து பூஜையன்று சிவன் சன்னிதியின் முன் ஆறுகலசங்களுடன் அக்னி குண்டம் அமைத்து வழிபட்டு அபிஷேகம் செய்வர்.

அபிஷேகத்திற்கு 100 மூட்டை அரிசி!

தஞ்சாவூர் பெரிய கோயில் சிவலிங்கம் (பிரகதீஸ்வரர்) உலகிலேயே பெரியது. ஆறடி உயரம், 55 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 12.5 அடி உயரம், 23 அடி சுற்றளவு ெகாண்ட லிங்கம் எனத் தனித்தனிக் கருங்கற்களால் செதுக்கி இணைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தைச் சுற்றி வரத் தேவையான இடம் கருவறையைச் சுற்றி உள்ளது. வாசல் வழியாகத் தெரியும் சிவலிங்கத்தின் அளவு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேக, ஆராதனைக்கு வசதியாக இருபுறமும் படிகள் உள்ளன. ஐப்பசி பவுர்ணமியில் 100 மூட்டை அரிசியை சோறாக்கி அபிஷேகம் செய்வர். மலை போல சிவலிங்கத்தை சுற்றி நிரம்பி விடும்.

அன்னங்கள் இரண்டு!

மனிதனுக்கு இரண்டு விதமான அன்னங்கள் தேவை. ஒன்று – உணவு என்னும் அன்னம், மற்றொன்று – பக்தி என்னும் அன்னம். உணவை மட்டும் சாப்பிட்டு, உலக விஷயங்களில் ஈடுபட்டால் வாழ்வு அர்த்தமற்றதாகி விடும். பக்தி என்னும் உணவால் எண்ணம் துாய்மை பெறும். மோட்சம் என்னும் வீடுபேறு கிடைக்கும்.

Trending Now: