அந்தரங்க பக்தி!

04-11-2019 03:57 PM

‘‘பெண்ணே! பிள்ளையாருக்கு நம் மீது வருத்தம் போலும்! ‘இந்த கிழவனுக்கும் கிழவிக்கும் இரண்டு இலை அன்னம். நமக்கு மட்டும் ஓர் இலை அன்னமா?’ என்று  நமது குழந்தை எண்ணுகிறான். ஓர் இலை அன்னத்தை நடு இலையில் கொட்டி விடுகிறேன். மற்றோர் இலை அன்னத்தை நாம் இருவரும் பகிர்ந்து உண்ணலாம்! இது உனக்கு உடன்பாடா?’’ என்று கேட்டார்.

அந்த அம்மாள், ‘‘அப்படியே செய்யுங்கள்’’ என்றாள். ஓர் இலை அன்னத்தை எடுத்து நடு இலையில் கொட்டி விட்டார். ‘‘பிள்ளையாரப்பா, உனக்கு பசி எடுக்கவில்லையா? களைப்பாக இருக்கிறதா? அன்னத்தை பிசைந்து உனக்கு ஊட்டட்டுமா? தயவு செய்து தாமதிக்காமல் சாப்பிடு’’ என்று வேண்டிக் கொண்டார். பிள்ளையார் சாப்பிடவில்லை.

‘‘பெண்ணே! நாம் இத்தனை நாட்கள் அரசமரத்தின் கீழே பட்டினி கிடந்தோமே! இந்த கிழவனும் கிழவியும் ஒரு நாள் பட்டினி இருக்கக்கூடாதா என்று நம் மகன் கருதுகிறான். இன்று நாம் உபவாசம் இருப்போம். இந்த இலை அன்னத்தையும் நடு இலையில், படைத்து விடுவோம்’’ என்றார். ‘‘அதுதான் நல்லது’’ என்று அவள் கூறினாள். மற்ற இலையின் அன்னத்தையும் நடு இலையில் கொட்டிவிட்டார்.

‘‘மூத்த பிள்ளையாரே! முக்கால் படி சோறு படைத்திருக்கிறேன். நீ அடம் பிடிக்காதே. அமுது செய்து எங்களுக்கு அருள் செய்’’ என்று பலமுறை வேண்டினார். பிள்ளையார் சாப்பிடவில்லை. ‘‘பெண்ணே! இன்னும் உள்ளே சோறு இருக்கிறதோ என்று மகன் சந்தேகப்படுகிறான். சோற்றுப்பானையை கொண்டு வந்து மகனிடம் காட்டு’’! என்றார். அந்த உத்தமி சோற்றுப் பானையை கொண்டு வந்து மகனிடம் காட்டினாள். ‘‘பிள்ளையாரப்பா! பானையை பாரப்பா! உன் பாத சாட்சியாக ஓர் பருக்கையும் கிடையாது. இந்த ஏழைகளை அலட்சியம் செய்யாதே. நாங்கள் உன் அடிமைகள். அமுது செய்தருள்’’ என்று இன்னுரை கூறி வேண்டினர் பிள்ளையார் அமுது செய்தாரில்லை.

அந்தணருக்கு சீற்றம் பொங்கி எழுந்தது ‘‘பெண்ணே! மாலை மணி ஆறாச்சு. இன்னும் என்ன ஆராய்ச்சி? உலக்கையை கொண்டு வா. இவன் தொப்பை கிழிய இடிக்கிறேன்’’ என்றார். அவள் உலக்கையை கொண்டு வந்து கொடுத்தாள். தம் மீது நம்பிக்கை வைத்த அந்தணருக்கிரங்கி ஆனை முகத்து அண்ணலார் இலையில் தும்பிக்கையை வைத்தார். அன்னம்  மறைந்துவிட்டது. பிள்ளையார் அமுது செய்தார் என்ற ஆனந்தத்தில் அந்த சதிபதிகள்

துதி செய்து மகிழ்ந்தார்கள். அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பிள்ளையாரை வணங்கிவிட்டு ஒரு புறம் படுத்தார்கள்.

அய்யருக்கு பசியின் கொடுமையால் உறக்கம் வரவில்லை. ‘பெண்ணே! பிள்ளையார் வேண்டாம் என்று சொன்னேனே, கேட்டாயா? பிள்ளையார் முக்கால் படி சோறு தின்கிறார். உனக்கு அரைக்கால் படி, எனக்கு அரைக்கால் படி ஆக தினம் ஒரு படி அரிசிக்கு நான் எங்கே போவேன்?’’ என்று கூறி வருந்தினார்.

– தொடரும்

நன்றி  :  ‘வாரியார் வாக்கு’

Trending Now: