வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் தொழில் துவங்க உதவ ஒற்றை சாளர முறை அமைக்கிறது மத்திய அரசு

22-10-2019 08:01 PM

புது டெல்லி

இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகிற வெளிநாட்டவருக்கு உதவுவதற்காக, அவர்கள் இந்தியாவில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொழில் தொடங்குவதற்கு உதவும் ஒற்றைச்சாளர முறை அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசின் தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை செயலாளர் குரு பிரசாத் மொகபத்ரா செய்தியாளர்களிடம் கூறினார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்யவும் அந்த முதலீட்டை பயன்படுத்தி இந்தியாவில் தொழில் துவக்குவதற்கு ம் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த ஒற்றைச்சாளர முறை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உதவி செய்யும். இந்த ஒற்றைச் சாளர முறை அமைப்பில் மத்திய அரசு அதிகாரிகளும் மாநில அரசு அதிகாரிகளும் இடம் பெறுவார்கள்.

இந்த ஒற்றைச் சாளர முறை மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான அனுமதிகள், ஒப்புதல்கள் ஆகியவை பெற்றுத் தரப்படும். இந்த ஒற்றைச் சாளர முறை வடிவமைப்புக்கான திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது என்று குருபிரசாத் மொக பத்ரா தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு ஈர்ப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளது. பலதுறைகளில் முதலீட்டுக்கான வீதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக ஒரே கம்பெனியின் பொருள்களை சில்லரை முறையில் விற்பதற்கான முதலீட்டு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அதேபோல நிலக்கரி சுரங்கங்கள், காப்பீடு, ஒப்பந்த முறையில் உற்பத்தி ஆகிய துறைகளில் எல்லாம் அந்நிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன என குருபிரசாத் கூறினார். வெளிநாட்டவருக்கான முதலீட்டு விதிகளை மேலும் எளிமையாக்க என்ன செய்யலாம் என அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக பல்வேறு அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன.

நடப்பு ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் இந்தியாவில் அன்னிய முதலீடு 28 சதவீதம் அதிகரித்துள்ளது. 28 சதவீத அதிகரிப்பு என்பது 1603 பில்லியன் டாலர் முதலீட்டைக் குறிப்பதாகும் என குருபிரசாத் குறிப்பிட்டார்.Trending Now: