வங்காள தேச கிரிக்கெட் வீரர்கள் பிரச்சனையில் தலையிட முடியாது: பிசிசிஐ கைவிரிப்பு

22-10-2019 03:16 PM

புதுடில்லி

வங்காள தேச கிரிக்கெட் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ, அது அந்நாட்டின் உள்விவகாரம் என்பதால் அதில் தலையிட முடியாது என்று கூறியுள்ளது.

வங்காள தேச கிரிக்கெட் அணி, நவம்பர் மாத தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில், வங்காள தேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் வங்காள தேச கிரிக்கெட் வீரர்கள், தங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு வங்காள தேச கிரிக்கெட் வாரியம் பதிலளிக்கும் வரை கிரிக்கெட் சம்பந்தமாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடப்போவதில்லை என வீரர்கள் அறிவித்துள்ளனர். இதனால், இந்திய சுற்றுப்பயணம் கேள்விக்குறியாகியுள்ளது.

வங்காள தேச கிரிக்கெட் வீரர்களின் இந்தப் போராட்டத்தில், ஷகில் அல் ஹசன், மஹ்மதுல்லா, ரஹிம், தமிம் இக்பால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில்,”இந்திய அணிக்கு எதிரான தொடரில் வங்காள தேச பங்கேற்க உள்ளதால், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. எனினும் இந்த விவகாரம் வங்காள தேச கிரிக்கெட் தொடர்பான உள் விவகாரம். இதில் பிசிசிஐ நிச்சயம் தலையிடாது” என்று கூறினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டிருக்கும் கங்குலி, இருநாட்டு கிரிக்கெட் அதிகாரிகளுடன் இணக்கமாக இருப்பதால், இந்த பிரச்சனையை அவர் தீர்த்துவிடுவார் என்று பிசிசிஐ நம்புகிறது.

இந்தியா- வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனால் வங்கதேசத்திலிருந்து ஏராளமான ரசிகர்கள் போட்டியைக் காண வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கொல்கத்தா மைதானத்தில் நவம்பர் 22ம் தேதி நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியைக் காண வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா வருகிறார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.Trending Now: