நாகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புதிய வீடுகள் வழங்கினார்

21-10-2019 11:57 AM

சென்னை,

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புதிய வீடுகளை வழங்கினார்.

காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர்  ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. மின்சாரம் தடைபட்டதுடன், விவசாயிகளும் வாழ்வாதாரத்தை இழந்தனர். குடிசைகள், ஓடுகள் வேயப்பட்ட வீடுகளில் வசித்த பல்லாயிரம் பேர் முற்றிலும் தங்களது வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்தனர்.

கஜா புயல் பாதித்த பகுதிகளில் மறுகட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில், முழுவதுமாக வீடுகளை இழந்தவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இலவசமாக வீடு கட்டித் தரப்படும் என நடிகர் ரஜினிகாந்த் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

தற்போது, கோடியக்கரை பகுதியில் 4 வீடுகளும் தலைஞாயிறு பகுதியில் 6 வீடுகளும்  என மொத்தம் 10 வீடுகளும் 18 லட்சம் செலவில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கட்டப்பட்டடுள்ளன. 

மீட்பு பணிகள் கடந்த 6 மாதமாக நடைபெற்று வந்தன. தற்போது அந்த பணிகள் நிறைவுபெற்ற நிலையில் பயனாளர்கள் 10 பேரை சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்திற்கு அழைத்து, 

நாகப்பட்டினம் மாவட்டத்தில்  கட்டப்பட்டுள்ள புதிய வீட்டிற்கான சாவியை வழங்கினார். சாவியுடன் குத்துவிளக்கையும் நடிகர் ரஜினிகாந்த் பரிசாகக் கொடுத்துள்ளார்.

ரஜினிகாந்திடமிருந்து வீடுகளைப் பெற்ற பயணாளிகள்  அரசாங்கம் செய்யாததை எங்களுக்கு செய்து கொடுத்துள்ளார் என நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.Trending Now: