கேமராமேன் மட்டும் பின் தொடர மோடியை தனியாக சுத்தம் செய்ய ஏன் விட்டீர்கள்? - பிரகாஷ்ராஜ் கேள்வி

13-10-2019 06:52 PM

சென்னை,

ஒரு கேமராமேன் மட்டும் பின் தொடர அவரை தனியாகச் சுத்தம் செய்ய ஏன் விட்டீர்கள் என்று பிரதமர் மோடி கோவளம் கடற்கரையைச் சுத்தம் செய்தது தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான 2-ம் கட்ட அதிகாரபூர்வமற்ற சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

கோவளத்தில் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே நேற்று காலை, கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார் பிரதமர் மோடி. 

அப்போது கடற்கரையோரங்களில் இருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளைச் சுத்தம் செய்தார்.

பிரதமர் மோடி கடற்கரையைச் சுத்தம் செய்த வீடியோ, அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. தனி ஆளாக பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்தது மட்டுமன்றி, கையில் எவ்வித உறையும் போடாமல், காலணியில்லாத வெறுங் காலுடன் இதைச் செய்துள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

 பிரமதர் மோடியின் செயலுக்கு பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பிரதமர் மோடியின் இந்தச் செயல் தொடர்பாக பா.ஜ. கட்சியினரைத் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பதிவில்,

"நமது பிரதமரின் பாதுகாவலர்கள் எங்கே?  ஒரு கேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய விட்டீர்கள்? ஒரு வெளிநாட்டுப் பிரதிநிதி இங்கு இருக்கும் போது,சம்பந்தப்பட்ட துறையினர்  அருகிலுள்ள அந்தப் பகுதியை எப்படி சுத்தம் செய்யாமல் விடலாம்?" 

என்று பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமரின் வீடியோவையும் இணைத்துள்ளார்.

அக்டோபர் 11ம் தேதி, மாமல்லபுரத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சுற்றி பார்த்ததற்கும் பிரகாஷ் ராஜ் தனது  டுவிட்டரில் 

அப்படிபோடு மூமெண்ட்...இன்னும் என்னால்லாம் பார்க்கணுமோ சாமிமிமி...

என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.Trending Now: