தென் ஆப்பிரிக்காவுடன் 2-வது டெஸ்ட் போட்டி: இன்னிங்ஸ் வெற்றியுடன் வரலாறு படைத்தது இந்திய அணி

13-10-2019 03:02 PM

புனே,

தென் ஆப்பிரிக்காவுடனான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் புனேவில் நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 275 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தென் ஆப்பிரிக்க அணி 326 ரன்கள் பின்தங்கியிருந்ததால் இந்திய அணி இன்று காலை ஃபாலோ ஆன் செய்ய அழைத்தது. இதன்படி, தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸை இன்று தொடங்கியது.

2-வது இன்னிங்ஸிலும் மிதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால், உணவு இடைவேளையில் 74 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு, டி காக் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா சுழலில் போல்டானார்.

இதையடுத்து, பவுமா 38 ரன்கள் எடுத்திருந்தபோது அவரும் ஜடேஜா சுழலில் ஆட்டமிழந்தார்.

பின்னர், வேகப்பந்து வீச்சாளர்கள் மீண்டும் தங்களது திறனை வெளிப் படுத்தத் தொடங்கினர்.

44 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த முத்துசாமி ஷமியின் வேக பந்தில் ஆட்டமிழந்தார்.

8-வது விக்கெட்டில் 56 ரன்கள் சேர்த்த நிலையில் பிலாண்டர், உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். இவர் 72 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய ரபாடா 1 பவுண்டரி மட்டுமே அடித்த நிலையில், அவரும் உமேஷ் பந்தில் ஆட்டமிழந்தார்.

கடைசி விக்கெட்டாக மகாராஜை (22) ஜடேஜா ஆட்டமிழக்கச் செய்தார்.

தென் ஆப்பிரிக்க அணி 67.2 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஆட்டத்தையும் இழந்தது. 

1 இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனையும் படைத்துள்ளது.

3 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்திய அணி 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

2008ஆம் ஆண்டுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணியை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாலோ-ஆன் ஆக்கிய முதல் அணியும் இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் அடித்த விராட் கோலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டியில் தனது 7-வது இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். 297 பந்துகளில் 28 பவுண்டரிகளுடன் தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார் கோலி.

டெஸ்ட் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

முன்னதாக, 1994 / 95 – 2000 / 2001 ஆகிய காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை வென்றதே சாதனையாக இருந்தது.

இந்திய அணி தற்போது 2012 / 2013 ஆண்டு முதல் தொடர்ச்சியாக 11 உள்ளூர் டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.Trending Now: