அக்.17ம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

13-10-2019 12:42 PM

சென்னை,

அக்டோபர் 17ம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
வளிமண்டல கீழடுக்கில் கிழக்குத் திசை காற்று வீசத் தொடங்கியுள்ளது.
தென் மேற்குப் பருவ மழை வடக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளிலிருந்து படிப்படியாக விலகி வரும் நிலையில் வடகிழக்குப் பருவ மழை எதிர்வரும் அக்டோபர் 17ம் தேதியையொட்டி துவங்க வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் வெப்பச் சலனத்தின் காரணமாக மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக கோபிச்செட்டிப்பாளையத்தில் 13 செமீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும்.

வட தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்த வரையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

இவ்வாறு, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.Trending Now: