அடுத்த மக்களவை தேர்தலுக்குள் சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவார்கள்: அமித் ஷா உறுதி

09-10-2019 12:25 PM

கைதால் (ஹரியானா)

வரும் 2024ம் ஆண்டு அடுத்த மக்களவை தேர்தல் நடப்பதற்குள் நாட்டில் உள்ள அனைத்து சட்டவிரோத குடியேறிகளும் வெளியேற்றப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

ஹரியானாவில் வரும் 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஹரியானாவின் கைதால் நகரில் மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சார கூட்டத்தில் அமித் ஷா பேசியதன் விவரம் பின்வருமாறு :

நாங்கள் மீண்டும் 2024ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்காக உங்களிடம் வாக்கு சேகரிக்க வரும் போது நாட்டில் சட்டவிரோதமாக ஊடுறுவிய அனைவரும் விரட்டப்பட்டிருப்பார்கள் என உறுதி அளிக்கிறேன்.

கடந்த 70 வருடங்களாக நம் நாட்டில் சட்டவிரோதமாக ஊடுறுவியவர்களால் நம் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தி அவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு நாட்டை விட்டு வெளியேற்றுவதில் பாஜக மற்றும் மோடி அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரந்தீப் சிங் சுர்ஜேவாலா எதிர்க்கிறார்கள். அதனால் என்ன விளைவு ஏற்படும் என்பதை கைதால் மக்கள் ரந்தீப் சிங் சுர்ஜேவாலாவுக்கு புரிய வைக்க வேண்டும்.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் காங்கிரஸ் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது ? பாஜக எதை செய்தாலும் காங்கிரஸ் அதை எதிர்க்கிறது.

சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யும் துணிச்சல் காங்கிரஸுக்கு இல்லை. ஆனால் பிரதமர் மோடியின் அரசு இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த பின் நடந்த முதல் பாராளுமன்ற கூட்டத்திலேயே சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.

இது பாஜக சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. நம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயம். இந்த நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகளின் ஆதரவையும் எதிர்ப்பார்க்கிறோம்.

சட்டப்பிரிவு 370க்கு ராகுல் காந்தி ஆதரவளிக்கிறாரா இல்லையா என்பதை அவர் தெளிவுப்படுத்த வேண்டும் என அமித் ஷா கூறினார்.

பிரான்ஸில் ரபேல் விமானத்துக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆயுத பூஜை செய்ததை காங்கிரஸ் தலைவர்கள் கேலி செய்தது குறித்து அமித் ஷா பேசுகையில் :

பிரான்சில் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆயுத பூஜை செய்தார். ஆனால் அதை பற்றி காங்கிரஸ் கேலி செய்கிறது.

ஏன் ஆயுத பூஜை செய்யும் நமது பாரம்பரியத்தை நாம் பின்பற்றக்கூடாதா? நம் பாரம்பரியத்தை நாம் உயிர்ப்புடன் வைத்திருக்க கூடாதா ? ஆனால் காங்கிரஸ் இதையும் எதிர்க்கிறது. எதை எதிர்க்க வேண்டும் எதை எதிர்க்க கூடாது என்பதை பற்றி காங்கிரஸ் சிந்திக்க வேண்டும் என அமித் ஷா சாடினார்.

ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ஊழலில்லாத ஆட்சியை அளித்துள்ளதாக அமித் ஷா பாராட்டினார். மனோகர் லால் கட்டார் எதிர்க்கட்சிகளைப் போல் குறிப்பிட்ட சாதிக்காக பாடுபடாமல் அனைத்து மக்களுக்காகவும் பாடுபடுபவர் என அமித் ஷா கூறினார்.Trending Now: