ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான பேராசிரியை நிர்மலா தேவி மயங்கி விழுந்தார்

09-10-2019 11:50 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் ,

தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில்  இன்று ஆஜரான போது மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்கு விசாரணைக்காக பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். விசாரணை தொடங்கும் நேரத்தில் திடீரென நிர்மலா தேவி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவருக்கு முகத்தில் தண்ணீர் தெளித்தும், பெண் காவலர்கள் அவரது கைகளைத் தேய்த்து விட்டும் அவரை ஆசுவாசப்படுத்தினர். முதல்கட்ட உதவி அளிக்கப்பட்டது.

பின்னர், நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய  3 பேரும் அக்டோபர் 23 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து நிர்மலா தேவி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.Trending Now: