துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 49

04-10-2019 08:24 PM

‘கொடுமுடி கோகிலம்’ கே.பி.சுந்தராம்பாள்

பாடல்கள் மூலமும் தேசபக்தி உணர்வை மக்களிடம் ஊட்ட முடியும் என்று நிரூபித்தவர்களில் ‘கானக்குயில்’ கே.பி. சுந்தராம்பாள் முதன்மையானவர். தேசபக்தியும், தெய்வ பக்தியும் மிகுந்திருந்த இவரது வாழ்க்கை குறிப்புகளை இந்த வாரம் பார்ப்போம்.

இன்றைய ஈரோடு மாவட்டம் கொடுமுடி எனும் சிற்றூரில் மிக ஏழ்மையான குடும்பத்தில் 1908ம் ஆண்டு அக்டோபர் ௧௧–ம் தேதி பிறந்தவர் கே.பி. சுந்தராம்பாள். மிக இளவயதிலேயே தந்தையை இழந்த இவர் தாயார் பாலாம்பாள், தாய் மாமன் மலைக்கொழுந்து ஆகியோரின் பராமரிப்பில் வாழ்ந்தார். கொடுமுடி கிராமத்திலுள்ள லண்டன் மிஷன் பள்ளியில் கல்வி பயின்ற சுந்தராம்பாள், அப்போதே பாடும் திறமை பெற்றிருந்தார்.

நாடகக் கம்பெனி நடத்தி வந்த வேலுநாயர் ஒருமுறை கரூருக்கு ரயில் பயணம் மேற்கொண்டபோது, அங்கு பாடிக்கொண்டிருந்த சுந்தராம்பாளின் குரல் வளம் கண்டு பெரிதும் ஈர்க்கப்பட்டார். உடனடியாக அவரது தாய்மாமன் மலைக்கொழுந்துவை தொடர்பு கொண்டு அவரை கும்பகோணத்துக்கு வரவழைத்து, சுந்தராம்பாளை நாடகக்குழுவில் சேர்த்துள்ளார்.

முதல்முதலாக கரூர் நகரத்தில் நடைபெற்ற நல்லதங்காள் நாடகத்தில், மூத்த பிள்ளையான ஞானசேகரன் எனும் ஆண் வேடத்தை ஏற்ற சுந்தராம்பாள் ‘பசிக்குதே வயிறு பசிக்குதே’ என்ற பாடலை மிக உருக்கமாக, அருமையாக பாடி நடித்து நாடக ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றார். தனது 10வது வயதிலேயே 1917–ம் ஆண்டு இலங்கையின் கொழும்பு நகருக்கு நாடக குழுவினருடன் சென்ற கே.பி.சுந்தராம்பாள், அங்கு பல ஊர்களில் தொடர்ந்து பல்வேறு நாடகங்களில் பாடி நடித்து அந்த மக்களின் ஆதரவையும் பெற்றார். இவர் நடித்த வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற நாடகங்கள் மிகவும் பிரபலம்.

அந்த காலகட்டத்தில் தமிழ் நாடக உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்த செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா என்ற எஸ்.ஜி.கிட்டப்பா – கே.பி.சுந்தராம்பாளின் அசாத்திய திறமை கண்டு வியந்தார். வள்ளி திருமணம் உள்ளிட்ட பல நாடகங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து, பின்னர் இறந்து போனது. சில ஆண்டுகளில், அதாவது 1933–ம் ஆண்டு டிசம்பர் மாதம் எஸ்.ஜி.கிட்டப்பா காலமாகிவிட்டார். அப்போது அவருக்கு வயது 28. கே.பி.சுந்தராம்பாளுக்கு வயது 25. கணவன் இறந்த பிறகு அக்கால வழக்கப்படி வெள்ளைச் சேலை கட்டத் தொடங்கிய சுந்தராம்பாள் இறுதி வரையிலும் அதே வெள்ளை உடையுடனும், நெற்றி நிறைய நிருநீறுடனும் தான் வாழ்ந்து மறைந்தார்.

கிட்டப்பா மறைவுக்கு பிறகு நாடகத்திலோ, திரைப்படத்திலோ எந்த ஆண் நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன் என சபதம் ஏற்று அதை கடைசி வரை காப்பாற்றினார். நந்தனார் உள்ளிட்ட பல நாடகங்களில் ஆண் வேடம் தரித்து நடித்த சுந்தராம்பாள், பெண் வேடத்திற்கு பெண்களையே  தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார்.

1935–ம் ஆண்டு வெளிவந்த பக்த நந்தனார் திரைப்படத்தில் நடித்த இவர், அதில் 19 பாடல்களை பாடியுள்ளார். 1938–ல் வெளிவந்த மணிமேகலை திரைப்படத்தில் 11 பாடல்களையும் அடுத்தடுத்து வெளிவந்த ‘அவ்வையார்’ திரைப் படத்தில் 30 பாடல்களையும் பாடி நடித்தார்.

அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கே.பி. சுந்தராம்பாளை தேடி வந்து தங்கள் தேசபக்திப் பிரச்சார கூட்டங்களுக்கு அழைப்பார்கள். குறிப்பாக காமராஜர், சத்தியமூர்த்தி போன்ற தலைவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு சென்று தேசபக்திப் பாடல்களை பாடியுள்ளார்.

குறிப்பாக 1937–ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்ற போது காங்கிரசுக்கு ஆதரவாகவும் ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிராகவும் ‘ஓட்டுடையார் எல்லாம் கேட்டிடுங்கள்’ என்பது உள்ளிட்ட பிரச்சாரப் பாடல்களை பாடி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டியுள்ளார்.

தொடர்ந்து காங்கிரஸ் மேடைகளில் ‘காந்தியோ பரம ஏழை சந்நியாசி’, ‘சிறைச்சாலை என்ன செய்யும்’ என்பது போன்ற பாடல்களைப் பாடி தேசபக்தி உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளார். சென்னையில் போட்டி யிட்ட சத்தியமூர்த்தி, ‘என் வெற்றிக்கு கே.பி. சுந்தராம்பாள் பாடல்கள் தான் பெரிதும் துணை புரிந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார். தனது கணவர் எஸ்.ஜி.கிட்டப்பா மறைவுக்கு பிறகு சில காலம் பொது மேடைகளில் பாடுவதை நிறுத்தி யிருந்த நேரத்தில் மகாத்மா காந்தி, அவருடைய வீடு தேடிச் சென்று கேட்டுக்கொண்டதையடுத்து கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, அந்நிய ஏகாதிபத்திய எதிர்ப்பு தொடர்பான பாடல்களை மேடை களில் பாடத்தொடங்கினார்.

அரசியல் சார்பற்று அனைத்து தலைவர்களின் நன்மதிப்பை பெற்றிருந்த கே.பி. சுந்தராம்பாளை திமுக தலைவர் அண்ணாதுரை தாம் நடத்தி வந்த ‘திராவிட நாடு’ பத்திரிகையில் ‘கொடுமுடி கோகிலம்’ என இவருக்கு புகழாரம் சூட்டி கட்டுரை எழுதியுள்ளார்.  அறுபதுகளில் வெளியான பூம்புகார், மகாகவி காளிதாஸ், திருவிளையாடல், கந்தன் கருணை, துணைவன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் கே.பி.சுந்தரம்பாள் பாடி நடித்துள்ளார்.

திரைப்படங்களில் இவர் பாடிய ‘பழம் நீயப்பா’, ‘அரியது அரியது’, ‘வாழ்க்கை எனும் ஓடம்’, ‘தப்பித்து வந்தானம்மா’, ‘ஓடுங்கால் ஓடி’, ‘ஏழுமலை இருக்க எனக்கென்ன கவலை’, ‘ஞானமும் கல்வியும்’, ‘பழனிமலை மீதிலே’ உள்ளிட்ட திரைப்பாடல்களும் ‘ஞானப்பழத்தை பிழிந்து’ உள்ளிட்ட தனிப் பாடல்களும் இன்னும் அழியா காவியமாக உலவிக்கொண்டுள்ளது.

இந்திய அரசின் சிறந்த தேசியப் பின்னணிப் பாடகர் விருது, பத்மஸ்ரீ விருது, தமிழ் இசைச் சங்கத்தின் இசைப்பேரறிஞர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

காங்கிரஸ் மேடைகளில் தேச பக்திப் பாடல்களை பாடி பிரச்சாரம் செய்ததை அங்கீகரிக்கும் விதமாக 1958–ம் ஆண்டு காமராஜர் தலைமை

யிலான ஆட்சி தமிழகத்தில் நடை பெற்றபோது கே.பி.சுந்தராம்பாள் சட்ட மேல்சபை (எம்.எல்.சி) உறுப்பினராக நியமிக்கப்பட்டு சுமார் 6 ஆண்டுகள் பணியாற்றினார்.

தேச சேவை, தமிழ் இசை, நாடகம், அரசியல், திரைப் படம் என பலதுறை களிலும் சிறந்து விளங்கிய, பலராலும் ‘கானக்குயில்’ எனப் பாராட்டப்பட்ட கே.பி.சுந்தராம்பாள் 1980–ம் ஆண்டு செப்டம்பர் 19–ம் தேதி தமது 72வது வயதில் காலமானார்.Trending Now: