ரெப்போ வட்டிவீதம் 25 அடிப்படைப் புள்ளிகள் அளவுக்கு குறைப்பு

04-10-2019 11:00 AM

மும்பை

குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டியை கால் சதவீத அளவுக்கு குறைப்பது என்று இந்திய ரிசர்வ் வங்கி நாணயக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் இன்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதத்திலிருந்து 5.15 சதவீதமாக இன்று முதல் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற நாணயக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது.
இன்று அறிவிக்கப்பட்ட ரெப்போ வட்டி குறைப்பு இந்திய ரிசர்வ் வங்கி நாணயக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஐந்தாவது வட்டி குறைப்பு முடிவாகும்.
இந்த ஐந்து முடிவுகளிலும் ஒட்டுமொத்தமாக 1.35 சதவீதம் ரெப்போ வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாணய கொள்கை கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:
2019- 20 ஆம் ஆண்டுக்கான ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமாக அமையும் என  நாணயக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஜிடிபி குறைப்பு
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2  சதவீதத்திலிருந்து படிப்படியாக 6.1 சதவீதமாக குறையும் என்று நாணய கொள்கை கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2020 - 21ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவீதமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

உற்பத்திக் குறைவு அதிகரித்துக்கொண்டே போவதை  நாணய கொள்கை கமிட்டி கூட்டம் கவலையுடன் பரிசீலித்தது. அரசு சமீபத்தில் மேற்கொண்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு மற்றும் சலுகைகள் மானியங்கள் ஆகியவை காரணமாக தனியார் முதலீடு உயரும் என்றும் அதன் காரணமாக உற்பத்தி உயரும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நாணயக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்ட எல்லா உறுப்பினர்களும் ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பதை ஆதரித்து வாக்களித்தனர். டோலாக்கியா என்ற உறுப்பினர் 40 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு ரெப்போ வட்டி விகிதம் குறைக்கவேண்டும் என்று தன்னுடைய வாக்களிப்பின் போது வலியுறுத்தியுள்ளார். மற்றவர்கள் அனைவரும் 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பது பொருத்தமாக அமையும் என்று குறிப்பிட்டனர்.

வட்டிகள் குறையும்

கடந்த நான்கு வட்டி குறைப்புகள் மூலம் ரெப்போ வட்டியில் மொத்தம் 110 அடிப்படைப் புள்ளிகள்  குறைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த வட்டிக்குறைப்பில் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கிய வட்டிக்குறைப்பு 30 முதல் 40 அடிப்படைப்புள்ளிகள்தான். 

ரெப்போ வட்டி குறைப்பு வங்கிகளின் கடன் வட்டி  குறைப்பிலும் உடனடியாக எதிரொலிக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது. அதற்கு வங்கிகள் தங்கள் வட்டி வீதங்களை ரெப்போ வட்டியோடு இணைக்க வேற்ண்டும் என்று இந்திய ரிசர்வ வங்கி ஆலோசனை தெரிவித்தது. ரெப்போ வட்டியுடன் வங்கிகளின் கடன் வட்டி வீதங்கள் இணைக்கப்பட்டால் ரெப்போ வட்டிக்குறைப்பு மூலம் உடனே வங்கிகளின் கடனுக்கான வட்டிக்குறைப்புக்கு வழி ஏற்படும் என ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்தது. இந்திய ரிசர்வ வங்கியின் ஆலோசனையை ஏற்று தங்கள் கடன்களுக்கான வட்டி வீதங்களை ரெப்போ வட்டியுடன் இப்பொழுது பல வங்கிகள் இணைத்துள்ளன. அதன் காரணமாக  தொழில் மூலதனக்கடன், நடைமுறை மூலதனக் கடன், வீட்டுவசதிக்கடன்,மோட்டார் வாகனக்கடன் ஆகியவற்றுக்கு வட்டிக்குறைப்பின் பலன் உடனே கிடைக்கும் .இக்கடன்களுக்கான வட்டிகள் உடன் குறையும் என்று நம்பப்படுகிறது.

பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற வரையில் உற்பத்தி வளர்ச்சியை ஊக்குவிக்க நாணயக் கொள்கை கமிட்டி ஆதரவான முடிவு எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் ரெப்போ வட்டியை இன்னும் 60 அடிப்படைப் புள்ளிகள் அளவுக்கு குறைக்க வாய்ப்பு இருக்கிறது தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று கருத்து தெரிவித்துள்ளது.

ரெப்போ வட்டி கால் சதவீதம் குறைவதால் விலை குறையும்; விற்பனை உயரும், அன்னிய முதலீடு வந்து குவியும் என்று எதிர்பார்க்க முடியாது.

மக்களின் வாங்கும் சகதி உயரவேண்டும். அதனால் எல்லா அம்சங்களும் சீராக வாய்ப்பு உள்ளது என பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.Trending Now: