சிறுகதை : அந்த ஒரு வேலை...! – பால் கண்ணன்

03-10-2019 03:37 PM

அதிசயங்களும், அற்புதங்களும், மலைக்க வைக்கக்கூடடிய எந்த விஷயங்களானாலும் வசுமதி தன் புருஷனுக்கு சுட்டிக்காட்டுவாள்.  

அன்று வானத்தில் ஒரு விமானம் பறந்ததும் அவனை இழுத்து வந்து, “மாமா... மேல பாருங்க. அந்த விமானத்தை செய்ய எத்தனை கஷ்டப்பட்டிருப்பாங்க. எத்தனை பேரோட மூளைகள் தூங்கியிருக்காது. உடம்புகள் ஓய்வு எடுத்திருக்காது. அவர்களும் உங்களை மாதிரி சாதாரண மனுஷங்கதானே. சந்திரயான்- 2 பூமியிலிருந்து நிலவுக்கு விட்டதில் எவ்வளவு பெரிய முயற்சி. அது நிலவில் தரை இறங்காமல் தோல்வியடைந்திருந்தாலும் விஞ்ஞானிகளுக்கு எவ்வளவு பெரிய பாராட்டு. அந்த பாராட்டு எதற்கு கிடைச்சது? முயற்சி... அந்த முயற்சி ஏன் உங்ககிட்ட இல்லே? அவங்களை மாதிரி விஞ்ஞானி ஆகலையேன்னு உங்களை வற்புறுத்தலே. நம்ம வீட்ல சின்ன சாதாரண அந்த ஒரு வேலை மட்டும் ஏன் உங்களால செய்ய முடியலே? அதான் எனக்கு பெரிய வருத்தம்...” என்று பொரிந்து தள்ளினாள்.

பஞ்சரான டியூப் போல சொரணையே இல்லாமல் ஜடமற்று நின்றிருந்தான்.

எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பது அவனுக்கு மிகப்பெரிய சுகம். கல்யாணத்திற்கு முன்னாடி எத்தனையோ கம்பெனிகளுக்கு பெற்றோர் வேலைக்கு சேர்த்து விட்டாலும் இவன் பிரயோஜனமில்லாதவன் என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ளியது கம்பெனிகள். அவனுக்கு பிடித்திருப்பது, சோம்பல் பேய். அது வெளியே வராததால் கையாலாகாதவனாக இருந்தான்.

பெற்றோர் மகனின் அவலத்தை நினைத்து கண்ணீர் விட்டனர். இவன் எப்படி கடைசி வரைக்கும் எங்களை காப்பான். ஒரு சதவீதம் கூட சுறுசுறுப்பு இல்லை. இதனால் பல இடங்களில் ஜோசியம் பார்த்தார்கள்.

“அவன் ஒரு பாரம். அவனால் நமக்குத்தான் பாவம் பிடிக்கும். உடம்புல நோய் இருந்தால் குணப்படுத்திடலாம். ஆனால் அவனே மனதையும், எண்ணத்தையும் தட்டி எழுப்பினால் மட்டுமே இதிலிருந்து மீளலாம். அது மட்டுமல்ல, அவனது மனதிற்குள் பெரிய பாதிப்பு நுழையணும். அப்போதுதான் புத்தி தெளிந்து எழுவான். இப்போது அவனுக்கு கிரகநிலை மோசமாக இருப்பதால் இன்னும் இரண்டு வருஷம் கழித்து ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வையுங்க. அவளைக்கொண்டு ஒரு மாற்றம் வரும்” என்ற நம்பிக்கை வார்த்தையில் மகிழ்ந்தனர்.

அதனால் இரண்டு வருஷம் கழித்து அவனுக்கு பெண் தேடினார்கள். பெண் வீட்டார் அக்கம் பக்கம் விசாரித்ததில் பின்வாங்கினர். இந்த மண்ணில் பிறந்த இவனுக்கு பெண்ணே கிடையாதா? பெற்றோரின் மனம் அழுதது.

அப்போது அவனது அக்கா அதாவது பெரியப்பா மகள் தன் மகளை கொடுக்க முன் வந்தாள்.

“கையில வெண்ணெயை வெச்சிக்கிட்டு நெய்யுக்கு அலையணுமா? அவனுக்கு என்ன குறைச்சல்? அவன் சொக்கத்தங்கம். தம்மு, தண்ணியடிக்கற பழக்கமிருக்கா? இல்லே... வெளியே எங்காவது அடிதடியில் இறங்கி வம்பு இழுத்துட்டு வர்றானா? என்ன... கொஞ்சம் உடம்பு வலித்தவன். குனிந்து எடுன்னா எடுக்க மாட்டான். யாருக்குத்தான் சோம்பேறித்தனம் இல்லே. மற்றவர்களை விட இவனுக்கு கொஞ்சம் அதிகம். அவ்வளவுதான். இதை காரணங்காட்டி இவனுக்கு பெண்ணே கிடைக்க மாட்டாள்ன்னு அர்த்தமாகிடுமா? என் பொண்ணை இவனுக்கு கட்டி கொடுக்கிறேன்” என்றதும் அவனது பெற்றோர் கையெடுத்துக் கும்பிட்டனர்.

கல்யாணம் ஆனதும் பொறுப்பு வந்துடும் என கணக்கு பார்த்தவர்கள் அடி மேல் அடிதான். கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லை. இதனால் வசுமதி அம்மாவிடம் வந்து சாடினாள்.

“ஏம்மா... எதுக்கு மாமாவை எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சே? உனக்கு வேற ஆம்பளையே கிடைக்கலையா? அவரை என் தலையில கட்டி என் வாழ்க்கையை சீரழிச்சிட்டியேம்மா. இது உனக்கே அடுக்குமா? உன் கல்யாணத்திற்கு முன்னாடி உனக்கொருத்தன் இப்படிப்பட்டவன் அமைந்திருந்தால் நீ சம்மதிச்சிருப்பியா?” பாம்பாய் சீறினாள்.

“வசுமதி...! வரம்பு மீறி பேசாதே. அவனது சுபாவம் எனக்குத் தெரியும். அப்படியிருந்தும் ஏன் கல்யாணம் பண்ணி வெச்சேன்னு தெரியுமா? நீ சுறுசுறுப்பானவள். எதையும் மனதைரியத்தோடு செயல்படுபவள். எத்தனை பெரிய பளுவான வேலையானாலும் சாதுரியமா நடந்துக்குவே. இவன் உனக்கு ஒரு பொருட்டே கிடையாது. இவன் உடம்பில் ஒட்டியிருக்கும் அந்த சோம்பல் தனத்தை உருக்கி வெளியே எடுக்கிறது உன்னோட பொறுப்பு. நிச்சயம் அவன் நல்ல மனுஷனா மாறுவான்.” அம்மா நம்பிக்கை வார்த்தைகளை அள்ளி வீச, அவளுக்கு கொஞ்சம் எனர்ஜி கிடைத்தது போன்று இருந்தது.

ஒரு நம்பிக்கை உடம்பில் ஏறியது. கணவனுக்கு ஒரு ஆசிரியையாக மாற மனம் துள்ளியது. தன் கணவனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுவதற்கு தயாரானாள்.

எழுதுற பேனாவை எடுத்து வந்து அவனது அருகினில் அமர்ந்தாள்.

“மாமா... இந்த பென் எதற்கு?

“எழுதுறதுக்கு...”

“எப்படி எழுதுது?”

“உள்ளே மை இருக்கு. அதான்...”

“அது மாதரிதான் மாமா... ஒரு போனாவுல எப்படி மை இருக்குதோ அதே மாதிரி மனுஷங்களுக்கு ஆறறிவு இருக்கு. இந்த பேனாவால கதை, கவிதை, கட்டுரை எழுத எவ்வளவு பயன்படுதோ... அதே மாதிரி நம்ம உடம்பும் பல வேலைகள் செய்ய பயன்படுது. அதனால சின்ன சின்ன வேலைகளை அறிவால் பயன்படுத்தி உடம்பை தயார் செஞ்சுக்கணும். நான் சொன்ன அந்த ஒரு வேலையை மட்டும் நீங்க செஞ்சிட்டீங்கன்னா... நீங்க கிரேட்.”

“இல்லே...! எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த ஒரு வேலையை மட்டும் என்னால் செய்ய முடியாது...”

“சரி... அந்த வேலையை நீங்க செய்ய வேண்டாம். நான் இப்போ ஆபீசுக்கு போகணும். துணிமணிகளையெல்லாம் ஊற வெச்சிட்டு போறேன். ஒரு மணி நேரம் கழித்து வாஷிங் மெஷின்ல போட்டு அப்புறம் கொடியிலே காயப்போட்டுடுங்க... இதான் நான் உங்களுக்கு கொடுக்கிற சுலபமான வேலை” என்றதும் அவன் முகம் சுழித்தான்.

“அதுவும் என்னால முடியாது. வேண்டாம் வசு...”

“அப்படீன்னா... நான் வேலைக்கு போய் சம்பாத்தியமும் பண்ணணும், வீட்டு வேலைகளையும் செய்து உங்களுக்கு அன்பாகவும், ஆதரவாகவும் இருந்து பொண்டாட்டியாகவும் இருக்கணுமா? சொல்லுங்க மாமா. என் மேல உங்களுக்கு பாசமும், பாவமும் இல்லையா. சொல்லுங்க மாமா...”

அவன் தரையை பார்த்து அமைதியாக இருந்தான்.

“இன்னிக்கு இந்த வேலையை சமர்த்தா முடிக்கிறீங்க. நான் சாயங்காலம் வந்ததும் துணிமணிகளையெல்லாம் அயன் பண்ணி அடுக்கா செல்ப்ல வெச்சிடுங்க...” என்று அவனது கன்னத்தை அன்பா தடவிக்கொண்டு துணிமணிகளை ஊற வெச்சிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினாள்.

மாலையில் அலுவலகத்திலிருந்து பெரிய எதிர்பார்ப்போடு வந்தாள். ஆனால் அவன் கூலாக படுத்துக்கொண்டே டி.வி. பார்த்துக்கொண்டிருந்தான். ஊற வெச்ச துணிகள் அப்படியே அசையாமல் இருந்தது. அதை கண்டவளுக்கு கால் விரலிலிருந்து கோபம் விர்விர்ரென தலைக்கு ஏறியது. பூரி கட்டையால் மண்டையை உடைக்கணும் என்ற ஆத்திரம் தீயாய் தெறித்தது. தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து வெளியே தூக்கிப்போடணும்னு இருந்தது.

நறநறவென பல்லைக்கடிக்கற நேரத்தில், டி.வியில, வடிவேல் அடிக்கிற காமெடியை ரசித்து வெடியாய் சிரித்தான். வெந்த புண்ணில் தீயை ஊற்றுவது போன்று ஆத்திரம் கட்டுக்கடங்காமல் எகிறியது வசுமதிக்கு.

தலையில் அடித்துக்கொண்டு தரையில் அமர்ந்தாள். தலை வலிக்க ஆரம்பித்தது. சிறிது நேரம் வலியை தாங்கிக்கொண்டு எழுந்து தைலத்தை தடவிக்கொண்டு டீ போட்டு குடித்தாள். மணி இரவு எட்டானது. துணிமணிகளை வாஷிங் மெஷினில் போட்டு விட்டு சமையல் பண்ணினாள்.

இப்படியே ஒரு மாதம் கடந்தது.

காலை மதியத்திற்கு சமையல் செய்து விட்டு அலுவலகத்திற்கு கிளம்பினாள்.

“மாமா... கேன் தண்ணீர் காலியாயிடுச்சு. எதிர் கடை ஒரு வாரம் லீவு. பக்கத்து தெருவில் பழனியண்ணே கடையில கேன் தண்ணீர் எடுத்து வையுங்க...” என்று அவனது முகத்தை பார்க்காமல் கிளம்பினாள்.

அலுவலகத்தில்...

“ஏண்டி வசுமதி. நானும் ஒரு மாசமா பார்த்துட்டு வர்றேன். ஏன் சைலண்ட்டா இருக்கே?” கேட்டாள் வெண்ணிலா.

“எல்லாம் என் மாமாவை நினைத்துதான். அவரை கட்டிக்கிட்ட நாளிலிருந்து ஒரு நாளாவது நிம்மதியா இருந்ததில்லை. எல்லா வேலைகளையும் நான்தான் செய்ய வேண்டியிருக்கு. உடம்பெல்லாம் வலிக்குது. போன ஜென்மத்துல அப்படி நான் என்ன பாவம் பண்ணினேன்... இப்போ இந்த ஜடத்துக்கிட்ட இப்படி அவஸ்தைப்படுறேன்...” என்று சொல்லும் போது கண்ணீர் கசிந்து நின்றது.

“உன் மாமாவைப் பற்றி என்கிட்ட அடிக்கடி சொல்வே. உன் நிலைமையை நினைத்து எனக்கு பரிதாபமா இருக்கு. இப்படியொரு சோம்பல் கணவன் கிடைச்சது துரதிர்ஷ்டம்.”

“அவருக்கு உழைச்சிக்கொட்டவா இப்பிறவியில பொறந்தேன்? எனக்கும் சந்தோஷம் வேண்டாமா? அவரு கையால சம்பாதித்து நாலு இடத்திற்கு மனுஷன் வெளியில கூட்டிக்கிட்டு போனால்தான் என்னவாம்? ஏதோ கிறுக்கிபோல ஆபீசுக்கும் வீட்டுக்கும் வந்து போய்க்கிட்டிருக்கேன். பேசாம செத்துடலாம் போலிருக்கு...”

“வசுமதி... இன்னிக்கு என்ன நாளு...? நம்ம பவித்ராவிற்கு ரிசப்ஷன். நாம எல்லாரும் சாயங்காலம் கிளம்புறோம். ஆபீஸ்ல கேப் ரெடி பண்ணிட்டாங்க. எல்லாத்தையும் மறந்து இன்னிக்காவது எங்க கூட ஜாலியா இரு” என்று சொன்னதும் தலையாட்டினாள் வசுமதி.

மாலை ஆறு மணிக்கு ரிசப்ஷனுக்கு செல்ல வேனில் ஏறி கல்யாண மண்டபத்திற்கு அடைந்தாள். மேளவாத்தியம், அலங்காரம், பாட்டு கச்சேரின்னு அமர்க்களமாக இருக்கும் காட்சியை கண்டதும் மனதில் ஒரு குதூகலம் நுழைந்தது. ஆபீஸ் ஊழியர்களுடன் கலந்து அரட்டையில் மனம் மகிழ்ந்தது. கணவன் மனைவின்னு ஒற்றுமையாக மண்டபத்தில் உட்கார்ந்திருப்பதை பார்த்து தனக்கும் அப்படி அமையலையேன்னு ஊடே ஒரு வருத்தமும் நுழைந்து கலந்தது.

சாப்பிடுவதற்கு முதல் மாடிக்கு அனைவரும் செல்ல, இவளும் பின்சென்றாள். வரிசையில் உட்கார்ந்தாள். ஆனால் சாப்பிடுவதற்கு மனம் முன்வரவில்லை. மாமாவின் எண்ணம் வந்து துன்புறுத்தியது. அக்கணம் அவனுக்கு பெரிய துரோகம் பண்ணிட்டோம்னு எண்ணம் தவித்தது.

‘ஐயையோ... மாமா என்ன பண்ணுவார்? அவரை விட்டு சாப்பிடுறேனே? எனக்காக வெயிட் பண்ணுவாரே. அவருக்கு பசிக்குமே? நான் போய்தான் சமைக்கணும். மணி இப்பவே எட்டாயிடுச்சு. எப்போ போய் சேர்ந்து சமைத்து மாமா சாப்பிடுறது...” என்ற எண்ணம் வந்ததும் விடுக்கென எழுந்தாள்.

“ஏய்... என்ன எழுந்திருக்கிறே? சாப்பிடு...” வெண்ணிலா கேட்டாள்.

“வேண்டாம் வெண்ணிலா. என் மாமா எனக்காக சாப்பிடாமல் இருப்பார். அவரை விட்டு நான் டின்னர் சாப்பிட்டதே இல்ல. அவரோட நினைவு என்னை நிம்மதியா சாப்பிட விடாது. நான் எப்போ போய் சமைத்து மாமாவிற்கு தருவது... நேரமாகிடும். அதனால நான் உடனே பஸ் பிடித்து போய்க்கிறேன்” என்று விறுவிறுன்னு கிளம்பினாள்.

ஒரு வழியா பஸ் பிடித்து வீட்டிற்கு செல்ல மணி பத்தை தாண்டியது. வீட்டிற்குள் நுழைந்தாள். கமகம ஒரு வாசனை அவள் நாசியில் தடவியது. அப்படியே சட்டி கருகுற வாசனையும் சேர்ந்தே வந்தது. டைனிங் டேபிளை பார்த்தாள். சாதமும், சாம்பாரும் வரவேற்றது.

“இதெல்லாம் யாரு பண்ணியிருப்பா...?” என்ற சந்தேகத்துடன் மெல்ல நடந்து வர, ரசம் நிரப்பப்பட்ட ஒரு சில்வர் பாத்திரத்தை இரண்டு கையில் பிடித்துக்கொண்டு வேகமாக வந்தவன் வசுமதியை பார்த்ததும் மெல்ல சிரித்தான். உடம்பெல்லாம் வியர்வை பூத்திருந்தது.

“மாமா... என்ன இது? நீங்க சமையல் பண்ணீங்களா? ”

“ஆமாம் வசு...” என்று ரசத்தை டைனிங் டேபிளில் வைத்து விட்டு அவளை பார்க்காமலேயே சிரித்தான்.

 “மாமா... என்ன அதிசயம்? எப்படி இதெல்லாம்...?” ஆச்சரியம் அவளை பிடித்துக்கொண்டது.

“வசு... எனக்கும் உணர்வு இருக்குது. பாவம் பரிதாபம் தெரியாத மிருகம்னு நினைச்சியா? கல்யாண வீட்ல பந்தி முன்னாடி என்னைப் பற்றி நினைப்பு வந்ததும் நீ உன் பசியை பற்றி கவலைப்படாமல் இந்த அருகதையற்றவனுக்காக எழுந்து வந்தே பாரு... அது என்னை ரொம்ப பாதிச்சிருச்சு. நீ எழுந்து வந்ததும் வெண்ணிலா எனக்கு போன் பண்ணி எல்லாத்தையும் உரைக்கும்படி சொன்னாள். என் கண்களே கலங்கிடுச்சு. நீ அடிக்கடி சொல்லுவியே... அந்த ஒரு வேலை மட்டும் செய்யுங்கன்னு. அத இன்னிக்குதான் எனக்கு செய்ய தூண்டியது. இனிமேல் அந்த ஒரு வேலை மட்டும் நீதான் செய்யப்போறே. ஏன்னா... நான் நாளையிலிருந்து வேலைக்கு போகப்போறேன். இனிமேல் நீ வேலைக்கு போக வேண்டாம்....” என்று சொன்ன மாமாவை கட்டி அணைத்து “நன்றி மாமா...” ஆனந்தக்கண்ணீர் வடித்துக்கொண்டு அவனது மார்பில் சாய்ந்தாள் வசுமதி.                                           ***Trending Now: