காந்தி மூட விரும்பிய மருத்துவமனை!

02-10-2019 07:16 PM

உயர்ந்த பண்புள்ளவர்கள், அவச் சொற்களை பேசுவதில்லை; பிறர் பேச அனுமதிப்பதும் இல்லை. மிக உயர்ந்த பண்புகள் கொண்ட மகாத்மாகவே, ஒருமுறை அவச்சொல் தொனிக்கும் வகையில் பேசியுள்ளார் என்றால் வியப்பாக உள்ளதா... அது, எந்த சூழ்நிலையில் என்று பார்ப்போம்...

சுதந்திரம் அடைவதற்கு முன், தமிழகத்தில், தொழுநோய் பாதிப்பு அதிகமிருந்தது. தொழுநோயாளிகள் நலன் கருதி, நிவாரண மையம் ஒன்றை துவங்க, சிதம்பரம், அண்ணாமலை பல்கலையில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றிய, ஜெகதீசன் ஆர்வம் காட்டினார்.

இதற்காக, பிப்., 8, 1945ல், காந்தியை சந்தித்தார். அவரது ஆர்வம் கண்ட காந்திஜிக்கு மிகவும் மகிழ்ச்சி. முழு ஆதரவை தெரிவித்து, ஆலோசனைகளும் கூறி அனுப்பி வைத்தார்.

விழுப்புரம் அருகே மழவந்தாங்கல் என்ற கிராமத்தில், பழைய அரசு பங்களாவை புதுப்பித்து, மருத்துவமனையாக மாற்றும் பணியில் ஈடுபட்டார் ஜெகதீசன். அந்த பணி நடந்து கொண்டிருந்த போதே, மகாத்மா நடத்திய, 'ஹரிஜன்' என்ற இதழில், தொழுநோய் பற்றி விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதி வந்தார்.

நிவாரண மையம் அமைக்கும் பணி முடிந்ததும், திறந்து வைக்க, மகாத்மாவுக்கு கடிதம் எழுதினார் ஜெகதீசன்.

அதற்கு காந்திஜி, 'யாரையாவது வைத்து நிவாரண மையத்தை திறந்து கொள்; திறப்பது பெரிய விஷயமல்ல; அதை, மூடுவதற்கு வேண்டுமானால் நான் வருகிறேன்...' என்று பதில் அனுப்பினார்.

'தெழுநோயை அறவே ஒழிப்பதுடன், அது போன்ற மருத்துவமனைகளே இல்லாமல் செய்ய வேண்டும்' என்பது தான், மகாத்மாவின் நோக்கம். அவர் தீவிரமாக செயல்பட்ட பணிகளில், தொழுநோய் ஒழிப்பும் ஒன்று.

ஒளி வட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் உள்ள, நாகராஜா கோவிலுக்கு, 1937ல் காந்திஜி சென்றார். பின், நகரின் மையப்பகுதியில், எஸ்.எல்.பி.

பள்ளி வளாகத்தில் நடந்த, பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது, தாழ்த்தப்பட்ட மக்களை, கோவில்களில் அனுமதித்த, திருவிதாங்கூர் மன்னரை, மனம் திறந்து பாராட்டினார்.

நாகர்கோவில் ஹரிஜன சேவா சங்கத்தினர் பஜனை பாடி வர, பெருந்திரளான மக்களுடன், கன்னியாகுமரி, பகவதி அம்மன் கோவிலுக்குள் நுழைந்தார். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலும் நீராடி மகிழ்ந்தார்.

பின், சுசீந்திரம் வந்த காந்திஜிக்கு, அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பள்ளி நாட்குறிப்பில், தமிழில் கையெழுத்து போட்டார் காந்தி. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலுக்குள், தாழ்த்தப்பட்ட மக்களுடன் சென்று வழிபட்டார்.

காந்திஜி மறைந்த பின், அவரது அஸ்தி, பிப்., 12, 1948ல், கன்னியாகுமரியில் சங்கமிக்கும் முக்கடலில் கரைக்கப்பட்டது. அஸ்தி வைக்கப்பட்டிருந்த கடற்கரை பகுதியில், பின் நினைவு மண்டபம் கட்டப்பட்டது.

அந்த மண்டபத்தில், ஆண்டு தோறும், காந்தி ஜெயந்தியன்று, பகல், 12:00 மணிக்கு, அஸ்தி கலசம் இருந்த இடத்தில், சூரியஒளி விழும் அற்புத நிகழ்வை காணலாம்.

இந்த மண்டபம், காந்திஜி நினைவை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

காந்திஜி, சிக்கனத்தை கடைபிடித்தவர். அவரது பிறந்தநாளில், அவரது தியாகத்தை போற்றும் வகையில், தண்ணீரை சேமிப்போம்; சிக்கனமாய் செலவு செய்வோம்!Trending Now: