ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

30-09-2019 06:30 PM

* திருவிழாவின் முடிவில் தீர்த்த உற்சவம் நடத்துவது ஏன்? எஸ். பக்தவத்சலம், நெல்லை.

பூமியில் நம் திருக்கோயில் உற்சவத்தை பக்தர்கள் நிகழ்த்துகிறோம். சுவாமிக்கு திருவிழா நடக்கும் சமயத்தில் அதில் கலந்து கொள்ள எல்லோரையும் அழைப்பது போல் வானுலக தேவர்களையும் அழைக்கும் முறையாகத்தான் கொடியேற்றம் செய்யப்படுகிறது. மனிதரும் தேவரும் முனிவரும் எல்லோரும் ஒருமித்து நடத்தும் மகிழ்ச்சியான திருவிழா நிறைவடைவதையும் வந்து கலந்து கொண்ட அனைவருக்கும் அருளும் விதமாகவும், திருவிழா நடத்தியதன் பயனாய் நல்ல மழை பொழிந்து பயிர்கள் விளைந்து பூமி செழிக்கவும், தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் அஸ்திர தேவர் எனும் சுவாமியையும் முழுக்காட்டுவார்கள். வானுலக தேவர்களும் சுவாமியோடு இணைந்து நீரிடி பக்தர்களுக்கு அருளுவதாக அர்த்தம். பிரதான தெய்வமும் தேவர்களும் நீராடும் சமயம் அதாவது தீர்த்தம் கொடுக்கும்போது நீராடும் பக்தர்களும் புண்ணியமும் நோயின்மையும் பெறுவார்கள்.

* வெள்ளெருக்கை சிலர் வீட்டில் வளர்க்கிறார்களே, தப்புதானே....? கே. கருணாகரன் வளர்மதி, செங்கோட்டை.

பூஜைக்கு உகந்ததாக இருப்பினும் வெள்ளெருக்கு, ஊமத்தை ஒதியம் போன்றவற்றை வீட்டில் வளர்க்கக்கூடாது.

* பூஜை செய்யும்போது குழந்தைகள் அழுதால் ஆகாது என்கிறார்களே, ஏன்? எம். சுப்பிரமணியன், கடையநல்லூர்.

இது மிகவும் தவறான வதந்தியாகும். ஒரு குழந்தை சிரிப்பதையும் அழுவதையும் கேட்க, அதன் பெற்றோர்  இருந்த தவத்திற்கு  நம்மால் பூஜை செய்யப்படும் சுவாமிதானே சந்தான பாக்யம் அருளியவர்! எனவே குழந்தை அழுவதால் ஒன்றும் அபசாரம் நிகழ்ந்துவிடாது.

* தனிஷ்டா நட்சத்திரத்தில் அகால மரணமடைந்தவர் களுக்கும் பரிகாரம் அவசியமா? எம். மாணிக்க மீனாட்சி, தேவிபட்டினம்.

தனிஷ்டா நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு புண்ணியலோகம் கிட்டும் எனவும், அவர்களைச் சார்ந்தவர்களைத்தான் பாதிக்கும் எனவும் ஐதீகம். எனவே இந்த நட்சத்திரங்களில் யார் எப்படி இறந்தாலும் பரிகாரம் செய்தேயாக வேண்டும்.