ஈஸ்வரார்ப்பணம்!

30-09-2019 06:26 PM

கோயில் வாசலிலேயே கும்பிட்டு கிடந்தான், ஒரு சன்னியாசி, பக்தர்களெல்லாம் அவன் மீது ஏறி மிதித்துக் கொண்டு போனார்கள்.

அவர்கள் சிலையை தரிசித்தார்கள்.

தெய்வம் வெளியே வந்து மெய்மறந்து கிடந்த பக்தனை தரிசித்தது.

உண்மையான இதயம் நல்லவர்களையும், இறைவனையும் பற்றி மட்டுமே சிந்திக்கிறது.

அந்த இரண்டுக்கும் நடுவே தன்னை வைக்கிறது.

‘செத்துப் போனவனை பற்றி நல்லதையே பேசு’ என்பார்கள்.

நம்முடைய நாட்டில் வாழ்ந்தாலும் செத்தாலும் திட்டுகிறவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு சுயதரிசனமும் இல்லை. தெய்வ தரிசனமும் இல்லை.

கோழி, பூமியையே கிண்டிக் கொண்டிருப்பதால்தான் அதற்கு ஆகாரம் கிடைக்கிறது. அடுத்த வீட்டு கோழியின் மேல் பாய்ந்து கொண்டே இருந்தால், அதுவே ஒரு கட்டத்தில் ஆகாரமாகி விடுமே தவிர, அதற்கு ஆகாரம் கிடைக்காது.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உணர்ச்சிபூர்வமாக ஒடுங்கி நிற்கிற ஆன்மாவுக்கு இறைவன் ஏதோ ஒரு வடிவத்தில் காட்சி தருகிறான்.

கால் இல்லாத முடவன் இறைவனை நேசித்தால், அவன் கைகள், கால்கள் செய்கின்ற வேலையை செய்யும்.

கை இல்லாத முடவன் இறைவனை நேசித்தால், அவனுடைய வாய், அந்த வேலையை செய்யும்.

‘தெய்வத்தின் காட்சி உண்டு’ என்று நம்பத் தொடங்கினால், பிறரை பற்றிய சிந்தனை வராது.

‘பக்கத்து வீட்டுக்காரன் மூன்றாவது மாடி கட்டுகிறானே’ என்ற வயிற்றெரிச்சல் வராது.

‘அவனுக்கு செல்வம் குவிகிறதே, இவனுக்கு பணம் குவிகிறதே’ என்ற ஆத்திரம் வராது.

கடவுள் நமக்காக போட்டது ஒற்றையடி பாதைதான் என்றால், ‘ஆண்டவனே, கால்களையாவது கொடுத்தாயே’ என்று சந்தோஷப்படு.

எதிரி பளபளப்பான காரில் பவனி வந்தால், ‘இந்த கார் விபத்துக்குள்ளாகாதா’ என்று எண்ணாதே; ‘பூர்வ ஜென்ம புண்ணியம்’ என்று நினை.

‘அரை அடிச் சுவருக்காக ஐகோர்ட்டு வரையிலும் ஏறி வழக்கு பேசி அந்தபுரத்து மந்திரம் பிள்ளை அடியோடு கெட்டது அறியமாட்டீரோ?’ என்றார் கவிமணி.

ஒருவன் தனக்கு தீங்கிழைத்து விட்டால், ‘போகட்டும், அவனவன், செய்த வினையை அவனவன் அனுபவிப்பான்’ என்பார்கள் நல்ல இந்துக்கள். அத்தோடு அந்த பிரச்னையை அவர்கள் ஒதுக்கி விடுகிறார்கள். அதனால் வேறு வேலை பார்ப்பதற்கு நேரம் கிடைக்கிறது.

‘அவன் பேசி விட்டானே! அவன் பேசி விட்டானே!’ என்று புலம்பிக் கொண்டிருந்தால், ரத்த கொதிப்பு வரும். சாப்பாடு செல்லாது; தூக்கம் பிடிக்காது; அதுவே ஒரு வகை நோயாகி விடும்.

தன்னை அடித்தவனை பார்த்து, ‘‘அப்பா எனக்கு உடம்பு சரியில்லை. ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்துக் கொள்!’’ என்று சொல்லி விடுவதில் பாவமில்லை.

அவனை திருப்பி அடிப்பதோ, அடிக்க முயற்சிப்பதோ தேகத்தையும், மனதையும் பாதிக்கும்.

இன்னொரு கதை சொன்னார் பரமஹம்சர்.

சரணாகதி என்பது உதட்டளவில் இருக்கக்கூடாது.  கடவுளிடம் முழுமையான அளவில் ஒருவன் உண்மையிலேயே சரணாகதி செய்ய வேண்டும். அப்போதுதான் கடவுளுடைய உதவி அவனுக்கு கிட்டும். அப்படி இல்லாவிட்டால் பகவானின் கிருைபயை பெற முடியாது. இந்த கருத்தை பகவான்  ராமகிருஷ்ணர் பின்வரும் கதை மூலம் விளக்குகிறார்.

ஒரு முறை சலவை தொழிலாளி ஒருவன் ஒரு பக்தனைக் கடுமையாக அடித்தான். அப்போது பக்தன் ‘‘நாராயணா! நாராயணா!’’ என்று மட்டும் சொல்லி அலறினான்.

அப்போது நாராயணர்  வைகுண்டத்தில் லட்சுமி சமேதராய் வீற்றிருந்தார். அவருடைய காதில் பக்தனின் அறைகூவல் விழுந்தது. உடனே அவர் எழுந்து புறப்பட ஆயத்தமானார். தேவி அவரிடம், ‘‘நாதா, தாங்கள் எங்கே போகிறீர்கள்?’’ என்று கேட்டாள்.

‘‘தேவி, எனது பக்தன் ஒருவன் பெரிய ஆபத்தில் இருக்கிறான். நான் அவனை காப்பாற்றியாக வேண்டும்’’  என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக நாராயணர் புறப்பட்டார். ஆனால், இரண்டு மூன்று அடி தூரம் சென்றதும் மீண்டும் திரும்பி வந்து அவர் தமது ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

இதை பார்த்த லட்சுமி திகைத்தாள். ‘‘பிரபோ, இவ்வளவு விரைவில் திரும்பி விட்டீர்களே, ஏன்?’’ என்று கேட்டாள்.

நாராயணர் புன்முறுவல் பூத்தபடியே பதில் சொன்னார்; ‘‘நான் போக வேண்டிய அவசியமே இல்லாமல் போனதை பார்த்தேன். அந்த பக்தனும் தொழிலாளியாகி விட்டான். தன்னைத்தானே அவன் காப்பாற்றிக் கொள்ள நினைத்தான். இப்போது தன்னை அடித்தவனை அவன் திருப்பி அடிக்க தொடங்கியிருக்கிறான். ஆகவே, நான் அங்கு போய் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. எனவே அவசியமில்லாததால் நான் திரும்பி வந்து விட்டேன்’’ என்று பதில் சொன்னார்.

முற்றிலும் உன்னை நீ கடவுளிடம் ஒப்படைத்து சரணாகதி செய்ய வேண்டும். அப்படி நீ செய்தால் அன்றி கடவுள் உன்னை காப்பாற்றமாட்டார். உண்மையாகவே உன்னை நீ பகவானுடைய பீடத்தில் சமர்ப்பித்துவிட வேண்டும். நாம் நமது ஆணவத்தை துறந்ததாக வேண்டும். அப்படி செய்தால் அன்றி, பகவான் நமது பொறுப்புகளை தாமாக ஏற்றுக் கொள்வதில்லை.

யார் ஒருவன் கடவுளிடம் முற்றிலும் தன்னை சரணாகதி செய்கிறானோ, அவனை மட்டுமே பகவான் காப்பாற்ற முன்வருகிறார்.

நான் இப்போதெல்லாம் ஆண்டவனை பற்றியேதான் சிந்திக்கிறேன். ஆனால், அவன் எனக்கு உடல் நலிவைக் கொடுக்கிறான். அந்த நலிவோடு படுத்துக் கொண்டாவது அவனை பற்றித்தான் எழுதுகிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என் செயல்களின் பலனாக என் குழந்தைகளுக்காவது தெய்வ தரிசனம் கிட்டும்.

கவிஞர் கண்ணதாசனின்

 ‘அலைகள்’   நூலிலிருந்து...Trending Now: