இரண்டு கேடயங்கள்!

30-09-2019 06:20 PM

“உம்முடைய ரட்சிப்பின் கேடயத்தையும், எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்” (2 சாமு. 22:36, சங். 18:35).

யுத்தத்துக்கு ஒரு வீரனை அனுப்புகிற ராஜா, அவனுக்கு இன்ன இன்ன யுத்த ஆயுதங்கள் தேவை என்பதை, அறிந்திருக்கிறார். ஆண்டவர் கொடுக்கிற இரண்டு விதமான கேடயங்களுமுண்டு. முதலாவது, விசுவாசமென்னும் கேடயம். அது, கர்த்தரை நம்பி சார்ந்துகொள்கிற விசுவாசம். கர்த்தர் எனக்காக யுத்தம் செய்வார். மட்டுமல்ல, எனக்காக யாவையும் செய்து முடிப்பார், என்கிற விசுவாசம்.

இரண்டாவதாக, தேவபிள்ளைகளுக்கு “ரட்சிப்பு,” மாபெரும் கேடயமாய் விளங்குகிறது. ஒருவன் ரட்சிக்கப்படும்போது, “தேவனுடைய பிள்ளை” என்று அழைக்கப்படுகிற, பாக்கியத்தைப் பெறுகிறான். அதிகாரத்தைப் பெறுகிறான் (யோவா. 1:12). “அப்பா பிதாவே” என்று அழைக்கக்கூடிய, புத்திர சுவிகார ஆவியைப் பெறுகிறான் (ரோம. 8:15). சாத்தான், அவனை தொடமுடியாதபடி, அவன் பெற்றுக்கொண்ட  ரட்சிப்பு, அவனுக்கு கேடயமாயிருக்கிறது.

“ரட்சிப்பு” என்பதற்கு, இன்னொரு அர்த்தமுமுண்டு. அது “மீட்பு” ஆகும். எதிலிருந்து, உங்களுக்கு மீட்பு தேவை? முதலாவது, சாத்தானிடமிருந்தும், பிசாசின் ஆவிகளிடமிருந்தும் மீட்பு தேவை. இரண்டாவது, நித்திய நியாயத்தீர்ப்பிலிருந்தும், பாதாளத்திலிருந்தும், உங்களுக்கு மீட்பு தேவை. உலகம், மாம்சம், பிசாசினிடத்திலிருந்து மீட்பு தேவை. கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமையிலிருந்து மீட்பு தேவை. இயேசு, ரட்சகராக, அல்லது மீட்பராக உங்களுக்கு கேடயமாக இருந்து வருகிறார்.

பாவத்தின் அகோரத்திலிருந்து உங்களை மீட்டு, ரட்சிக்கும்படி, அந்த பாவத்தை சிலுவையிலே சந்தித்து, அவரே உங்களுக்குப் பாவநிவாரண பலியானார். உங்களுக்கு கேடயம். சாபத்திலிருந்து உங்களை மீட்டு, ரட்சிக்க சாபமான மரத்தில் தொங்கி, சாபமான முள்முடியை ஏற்றுக்கொண்டார். அது உங்களுக்கு ஒரு கேடயம். உங்களுடைய வியாதிகளை, நோய்களை, பலவீனங்களை ஏற்றுக் கொள்ள சரீரம் முழுவதிலும், தழும்புகளை ஏற்றுக்கொண்டார். அது உங்களுக்கு பெரிய கேடயம்.

பழைய ஏற்பாட்டிலும்கூட, ஆட்டுக்குட்டியின் ரத்தம், இஸ்ரவேலருக்கு கேடயமாய் விளங்கினது. பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்து, அதன் ரத்தத்தை எடுத்து, அவர்கள் வீட்டின் நிலைக்கால்களில் பூசினபோது, அந்த வீடுகளெல்லாம், கர்த்தருடைய பாதுகாப்புக்குள்ளே வந்தது. சங்காரத்தூதனால், உள்ளே நுழைய முடியவில்லை.

கர்த்தர் உங்களுக்கு மட்டுமல்ல, உங்களுடைய வீட்டார் அனைவருக்கும் மாபெரும் கேடயமாக விளங்குவாராக. ஆகவேதான், பக்தனாகிய யோசுவா, தன்னையும், தன் வீட்டிலுள்ள எல்லோரையும், கிறிஸ்துவின் பாதுகாப்பான கேடயத்தில் மறைத்துக்கொண்டு, “நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” என்று, முழங்கினார்

(யோசு. 24:15).

தேவபிள்ளைகளே, நீங்களும், உங்களுடைய குடும்பமும், கிறிஸ்துவின் ரத்தக் கோட்டைக்குள்ளே இருக்கிறீர்களா? இருப்பீர்களானால், எந்த பில்லி சூனியமும், செய்வினை வல்லமைகளும், உங்களுடைய குடும்பத்தை அழிக்காதபடி, கர்த்தர் தாமே, உங்களுக்கு அடைக்கலமும், பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமாயிருப்பார்.

நினைவிற்கு:- “கர்த்தர் என் பெலனும், என் கேடயமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்”

(சங். 28:7).

நன்றி : அப்பம் ஆன்லைன்Trending Now: