ஈராக்கில் மினி பேருந்தில் குண்டு வெடித்து: 12 பேர் பலி

21-09-2019 06:09 PM

பாக்தாத்:

   ஈராக் நாட்டில் மினி பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பயணிகள் உயிரிழந்தனர்.

ஈராக்கின் கர்பலா நகரை நோக்கி 17 பயணிகளுடன் மினிப் பேருந்து  ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்நகரின் ராணுவ சோதனைச்சாவடி ஒன்றை பேருந்து கடந்த போது பயணிகள் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்தது.

இந்த சம்பவத்தில் மினி பேருந்தில் பயணம் செய்த 12 பயணிகள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 5 பயணிகள் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை.

இதையடுத்து கர்பலா நகரத்தில் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டுக்கு பிறகு ஈராக்கில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.Trending Now: