காஞ்சி மடத்தின் 3 யானைகளை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும் *ஐகோர்ட் உத்தரவு

19-09-2019 11:58 PM

  தனியார் வசமிருக்கும் காஞ்சி மடத்துக்கு சொந்தமான மூன்று பெண் யானைகளை மீட்டு,  திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்க்க  வேண்டுமென தமிழக வனத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

         காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான மூன்று பெண் யானைகள் இருந்தன. சந்தியா, ஜெயந்தி, இந்துமதி என பெயரிடப்பட்ட இந்த யானைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை எனக்கூறி பவுண்டேஷன் இந்தியா அமைப்பும், வனவிலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை அமைப்பும் கடந்த 2016ம் ஆண்டு தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. விழுப்புரம் மாவட்டம் குறும்பரம் கிராமத்தில் உள்ள முகாமில் இந்த மூன்று யானைகளும் தற்போது உள்ளன.

        இங்குள்ள மூன்று யானைகளையும் மீட்டு, அரசுக்கு சொந்தமான யானைகள் காப்பகத்தில் ஒப்படைக்கக்கோரி, விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இந்த முகாம் சட்டவிரோதமாக செயல்படுகிறது. தமிழ்நாடு அரசு வனத்துறையிடம் முறையாக அனுமதி பெறவில்லை. இந்த யானைகளை காட்டி, வெளிநாட்டினரிடம் நிதி வசூலிக்கப்படுகிறது. எனவே, இந்த முகாமை மூட உத்தரவிட வேண்டும். அங்குள்ள யானைகளை மீட்டு அரசு வனவிலங்குகள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்திட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

            இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாரயணன், சேசஷாயி ஆகியோர் அடங்கிய பெஞ்சானது, 'நான்கு வாரத்தில் இந்த 3 யானைகளையும் மீட்டு, திருச்சி எம்.ஆர்.  பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும், இந்த மையத்தில், யானைகளுக்கு உரிய மருத்துவ வசதி மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். யானைகளை இடமாற்றம் செய்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று தமிழ்நாடு அரசு வனத்துறைக்கு  உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.Trending Now: