குற்றாலம் டூர் அழைத்துச் சென்று டிரைவரை கொலை செய்து காரை கடத்திய வழக்கு * திருச்சி சிசிடிவியில் சிக்கிய பெண்ணுக்கு போலீசார் வலை

19-09-2019 12:24 AM

சென்னை:சென்னையில் இருந்து வாடகை காரை குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று கொலை செய்த வழக்கில் சிசிடிவி மூலம் திருச்சியைச் சேர்ந்த இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லையைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் சுந்தர்சிங் (வயது 54). சென்னை அசோக்நகர் 35வது தெருவில் வசித்து வருகிறார். கடந்த 5ம் தேதியன்று தனது நண்பர் ஒருவர் சொன்னதன் பேரில் குற்றாலம் செல்வதற்காக சவாரி ஏற்பாடு செய்தார். தனது நண்பரின் டிராவல்சில் இருந்து இன்னோவா காரை புக் செய்து தனது டிரைவர் நாகநாதனை சவாரிக்கு அனுப்பி வைத்தார். நாகநாதன் குரோம்பேட்டைக்கு சென்று கஸ்டமரை ஏற்றிக் கொண்டு குற்றாலம் சென்றார்.

குற்றாலம் சென்று சேர்ந்து விட்டதாக மறுநாள் சுந்தர்சிங்கு தனது செல்போனில் இருந்து அவ்வப்போது நாகநாதன் பேசியபடி இருந்துள்ளார். பின்னர் கடைசியாக கடந்த 8ம் தேதியன்று இரவு 8 மணியளவில் சுந்தர்சிங்கிடம் மீண்டும் பேசிய நாகநாதன் குற்றாலத்தில் இருந்து புறப்பட்டு விட்டதாகவும், 9ம் தேதி காலையில் சென்னை வந்து விடுவதாக கூறியுள்ளார். ஆனால் சொன்னபடி அவர் வரவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த சுந்தர்சிங் 10ம் தேதியன்று நாகநாதனை காணவில்லை, அவரை கண்டுபிடித்து தரும்படி அசோக்நகர் போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து நாகநாதன் மதுரை, கொட்டாம்பட்டியில் மழை நீர்  சேமிப்பு பள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

உடலை மீட்டு போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகின. நாகநாதனை குற்றாலத்துக்கு அழைத்துச் சென்ற நபர்கள் அவரை அடித்துக் கொலை செய்து மதுரை கொட்டாம்பட்டியில் வீசி விட்டு காருடன் தப்பியோடியது தெரியவந்தது. குற்றாலம் சவாரி புக்கிங் செய்த நபர்கள் போலியான முகவரி கொடுத்திருந்தனர். இதனையடுத்து அவர்களை கண்டுபிடிக்க போலீசார் தனி வியூகம் வகுத்தனர். சென்னையில் இருந்து குற்றாலம் வரை உள்ள முக்கிய சந்திப்புக்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது திருச்சியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் நாகநாதன் சென்ற கார் பதிவாகியிருந்தது. அவருடன் ஒரு பெண் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்தப் பெண் யார் என்று அவரது ஆதார் அட்டை விவரங்களை சேகரித்த போலீசார் அவர் பெயர் ஜெயசுதா என்பதும், திருச்சி மேலப்புதுாரைச் சேர்ந்த விஜய் என்பவரது மகள் என தெரியவந்து. அந்தப் பெண்ணுடன் வந்த கும்பல்தான் நாகநாதனை கொலை செய்து விட்டு காரை கடத்திச் சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அந்தப் பெண்ணை பிடிக்க தனிப்படை போலீசார் திருச்சி சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Trending Now: