புதிய மாவட்ட எல்லை பிரிப்பு முதல்வர் திடீர் ஆலோசனை

14-09-2019 12:15 AM

சென்னை:புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் எல்கைகளை வரையறுத்து பிரிப்பது மற்றும் கருத்து கேட்பு கூட்டத்தில் பெறப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து முதல்வர் தலைமையில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தமிழகத்தில் 32 மாவட்டங்கள் உள்ள நிலையில் புதிதாக கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றும், வேலுார் மாவட்டத்தை மூன்றாக பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்துார் ஆகிய நகரங்களை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

புதிய மாவட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் வருவாய் கோட்டங்களை பிரிப்பது, ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்த கருத்து கேட்பு கேட்பு கூட்டத்தில் மக்கள் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை எப்படி ஏற்பது என்பது குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் புதிய மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் சண்முகம், நிதித்துறை செயலர் கிருஷ்ணன், வருவாய்த்துறை செயலர், 3 மாவட்டங்களின் சிறப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அரக்கோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் அல்லது அருகில் உள்ள திருவள்ளூர் அல்லது காஞ்சிபுரம் மாவட்டத்துடன் அரக்கோணத்தை இணைக்க பொதுமக்கள், வணிக நிறுவனங்களின் பரிந்துரை, ராணிப்பேட்டைக்கு பதிலாக அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள், தென்காசி மாவட்டத்துடன் சங்கரன்கோவிலை இணைக்க கூடாது என்ற கருத்து உட்பட பல விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவது என்பது உட்பட மேலும் சில புதிய மாவட்டங்கள் அறிவிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனாலும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசு தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.முன்னதாக அறநிலையத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆய்வுக் கூட்டங்களை முதல்வர் தனித் தனியாக நடத்தினார். அறநிலையத்துறை சார்பில் மீண்டும் இலவச திருமண திட்டத்தை கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
Trending Now: