மன்னர் கோப்பெருஞ்சிங்கனுக்கு மணிமண்டபம் அமைக்க ராமதாஸ் வலியுறுத்தல்

11-09-2019 06:04 PM

சென்னை

  மன்னர் கோப்பெருஞ்சிங்கனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், காடவராயர் குலத்தைச் சேர்ந்த மன்னரும், நீர் மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்தியவருமான கோப்பெருஞ்சிங்கனின் 770-வது பிறந்தநாள், அவரது ஆளுகையின் கீழ் இருந்த பகுதிகளில் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மக்கள் நலனுக்காக மாபெரும் திட்டங்களைச் செயல்படுத்திய மன்னனின் பெருமைகள் வெளி உலகுக்குக் கொண்டு வரப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

பல்லவப் பேரரசர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், அவர்களின் வாரிசுகள் காடவராயர்கள், சம்புவராயர்கள் என இரு பிரிவாகப் பிரிந்து தங்களுக்கென சிற்றரசுகளை ஏற்படுத்தி ஆட்சி செய்யத் தொடங்கினர். சம்புவராயர்கள் திருவண்ணாமலை மாவட்டம் படைவீட்டையும், காடவராயர்கள் விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தையும் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர்.

காடவராயர் குலத்தின் முதல் அரசரான மணவாளப் பெருமாள் விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவரது மகன் கோப்பெருஞ்சிங்கன் வீரத்தின் விளைநிலமாக விளங்கினார். காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் சோழ இளவரசியை தில்லையில் வைத்து மணம் புரிந்தார். பின்னர் கி.பி. 1216 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தனது மைத்துனரும், சோழ மன்னருமான மூன்றாம் ராஜராஜ சோழனை கைது செய்து சேந்தமங்கலத்தில் சிறை வைத்தார். கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் அவர் கொடுத்த ஆதரவால் சம்புவராயர்கள், காடவராயர்கள், வானகோவரையர்கள், சேதிராயர்கள், கச்சிராயர்கள், நீலங்கரையர்கள் உள்ளிட்ட சிற்றரசர்கள் வலிமை படைத்தவர்களாக மாறினார்கள்.

சோழர்கள் காலத்தில் எவ்வாறு கல்லணை கட்டப்பட்டு நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்தல், தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் ஆகியவை கட்டப்பட்டனவோ, அதே போல் காடவராயர்கள் காலத்திலும் இறைவழிபாடு, நீர்மேலாண்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கி.பி. 1076 முதல் 1279 வரை 200 ஆண்டுகளுக்கும் மேலாக வட தமிழ்நாட்டை ஆட்சி செய்த காடவராயர்கள், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் தெற்கு கோபுரத்தை புதுப்பித்ததுடன், கிழக்கு கோபுரத்தை புதிதாக உருவாக்கினர். தில்லைக் காளி கோயிலைக் கட்டியதும் இவர்கள் தான்.

கடலூர் மாவட்டத்தில் பெருமாள் ஏரி, புதுச்சேரியில் திருபுவனை ஏரி, ஒழுகரை ஏரி ஆகியவற்றை அமைத்து அந்தப் பகுதிகளில் நீர்மேலாண்மையை மேம்படுத்தியவர்களும் காடவராயர்கள் தான்.
இத்தகைய சிறப்பு மிக்க காடவராயர்களும், சம்புவராயர்களும் வரலாற்றில் திட்டமிட்டு மறைக்கப்பட்டனர்.

அண்மைக்காலமாகத் தான் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும், பாமகவினரும் இணைந்து ஆவணி திருவோண நட்சத்திர நாளில் காடவராய மாமன்னன் கோப்பெருஞ்சிங்கனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

கொண்டாடப்பட வேண்டிய ஒரு மன்னனின் வரலாறு மறைக்கப்படுவதற்கு முடிவு கட்டப்பட வேண்டும். கோப்பெருஞ்சிங்கனுக்கு சேந்தமங்கலத்திலும், சம்புவராயர்களுக்கு படைவீட்டிலும் மணி மண்டபம் கட்டப்பட வேண்டும். இவர்களின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதுடன், இவர்களின் ஆட்சி வரலாற்றை பாடநூல்களில் பாடமாக சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.Trending Now: