அன்புடன் அந்தரங்கம் 15–9–19

11-09-2019 04:58 PM

அன்புள்ள அம்மா,

வணக்கம். என் வயது 27. நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். எனக்கு அம்மா மட்டும் இருக்கிறார். அப்பா, மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்து பத்து வருடங்களுக்கு முன்பு இறந்து போனார். அம்மா ஒரு பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு ஆசிரியையாக இருக்கிறார். நான் கல்லூரி படிக்கும் போது ஒருவரை காதலித்து வந்தேன். கல்லூரி முடித்து நான்கு ஆண்டுகள் வரை என்னுடன் பழக்கத்தில் இருந்தவர், திருமணம் என்னும் பேச்சு வந்ததும் ‘பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை’ என்று சொல்லி விலகி விட்டார். என் குடும்பத்தில் ஆண்கள் யாரும் இல்லை. எதையும் பெரிதாக்கி அவமானப்பட வேண்டாம் என்று அம்மா விட்டுவிட்டார். நான் தொடர்ந்து வேலையில் கவனம் செலுத்தி வந்தேன்.

அப்போது என் அலுவலகத்தில் பணிபுரியும், ஏற்கனவே திருமணமான ஒருவர் என்னுடன் நெருங்கி பழக ஆரம்பித்தார். முதலில் நண்பர்களாகத்தான் பழகினோம். என்னுடைய கடந்த காதல் குறித்து அவரிடம் அழுது புலம்புவேன். மிகுந்த சோகத்தில் இருந்த என்னை அவருடைய நட்புதான் மீட்டெடுத்தது. மனச்சோர்வில் தற்கொலை முடிவு வரை சென்ற என்னை பேசி பேசி ஒரு வழிக்கு கொண்டு வந்தார். வாழ்க்கையை குறித்து நிறைய பேசுவார். நான் இந்த வாழ்க்கையை வாழ்வதற்கு எவ்வளவு தகுதியானவள் என்றெல்லாம் சொல்வார். எனக்கு புது நம்பிக்கையை கொடுத்தவர் அவர்.

திடீரென்று அவருக்கு வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்ற சில மாதங்களில் மீண்டும் தினமும் பேச ஆரம்பித்தோம். சமீபமாக ஒருவருக்கொருவர் எல்லை மீறிய பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தினமும் நிறைய புகைப்படம் அனுப்பும்படி கேட்பார். நான் தூங்கி எழுந்ததிலிருந்து இரவு தூங்க செல்லும் வரை கேட்டுக் கொண்டே இருப்பார். அவரும் அனுப்புவார். ஆரம்பத்தில் விபரீதமாக தெரியவில்லை. இப்போது எனக்கு இதிலிருந்து விலகுவது கடினமாக இருக்கிறது.

மனைவி, குழந்தைகளுடன் வாழும் அவரின் மீது எனக்கு ஈர்ப்பு இருக்கிறது. அவரை என்றும் பிரியப்போவதில்லை என்ற தெளிவு இருப்பினும் அவருக்கு என் மீது ஈர்ப்பு இருக்கிறது. எதிர்காலமே இல்லாத இந்த உறவில் ஒருவருக்கொருவர் நேரம் செலவிட்டு கொள்கிறோம். அதையும் தாண்டி இப்போதெல்லாம் அவர் என்னை நிறைய புகைப்படங்கள் கேட்பது ஏதோ ஒரு விதத்தில் பயமாக உள்ளது. இந்த வலையில் எப்படி எப்போது விழுந்தேன் என்றே தெரியவில்லை. ஆனால் வெளியே  வர இயலாமல் சிக்கிக்கொண்டு தவிக்கிறேன்.

அம்மா வரன் தேடிக்கொண்டிருக் கிறார். ஆனால், எதுவும் எனக்கு அமையவில்லை. எனக்கும் வேறு எவர் மீதும் விருப்பம் வரவில்லை. இவையெல்லாம் எங்கே சென்று முடியும் என்றும் தெரியவில்லை. குழப்பமாகவே வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது.

அன்பு மகளே!,

நம் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று நிதானித்து திரும்பி பார்க்கும் போதே பிரச்னைகளில் பாதி சரியாகிவிடும். ஒரு வழியாக நீ அந்த கட்டத்திற்கு எப்படியோ வந்துவிட்டாய். நல்லது. செய்து கொண்டிருப்பது தவறு என்பதை  உணர்ந்துவிட்டாய். அது மிகவும் நல்லது. அடுத்த படிநிலை, தவறு செய்வதை நிறுத்துவது. அது சுலபமில்லை என்றாலும் நிறுத்தியாக வேண்டும். இதில் நீ குழப்பிக் கொள்வதற்கு எதுவுமே இல்லை.

நீ வருத்தத்தில் இருந்த போது தோள் கொடுத்து ஆதரவாக இருந்ததற்காக நன்றிகள் சொன்னால் போதும். அதற்காக அவர் எதிர்பார்ப்பதை எல்லாம் செய்யக்கூடாது. ஈர்ப்பு என்ற விஷயம் ஏதோ புனிதமானதும், அதிசயமானதும் அல்ல. அது ஒரு சாதாரண உணர்வு. இரண்டு பேர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால் , அதுவும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக பேசிக்கொண்டே இருந்தால், ஈர்ப்பு வரும். அதுவும் ஆண் – பெண் என்ற வேற்று பாலினமாக இருந்தால் நிச்சயம் வரும். ஆனால், நாம்தான் வரம்பு மீறாமல் அதற்கு தடை போட்டுக்கொள்ள வேண்டும்.

திருமணமானவர் என்று தெரிந்துதானே பழகியிருக்கிறாய்?  அப்படியென்றால் ஆரம்பத்திலேயே இதை நிறுத்தியிருக்க வேண்டாமா? எளிமையான வாழ்க்கைக்கு வழி தேடு. மீண்டும் மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொள்ளாதே. மனைவியை விட முடியாதவர் உன்னிடம் ஏன் நெருங்கி பழக வேண்டும்? உன் சூழ்நிலையை கொண்டு உன்னை பயன்படுத்திக் கொள்கிறாரா?

அவர் நல்லவரோ, கெட்டவரோ! அவருடைய உணர்ச்சிகள் உண்மையோ பொய்யோ! அதெல்லாம் நமக்கு தேவையில்லாதது. இந்த உறவுக்கு எதிர்காலம் இல்லை என்று தெரிந்தால், பிறகு எதற்காக உறவாட வேண்டும்?

27 வயதாகும் உனக்கு திருமணம், குழந்தைகள் என்ற  வாழ்க்கை இருக்கிறது. இதில் வீணாக சென்று மாட்டிக்கொள்ளாதே. கணவனாகவே இருந்தாலும் ஒரு வரையறை தாண்டி புகைப்படங்கள் பகிர்ந்து கொள்வது ஆபத்தானது.  இன்டர்நெட் பற்றிய முழு புரிதல் இல்லாமல் பெண்கள் தங்கள்  வாழ்க்கையை இதில் இழந்து வருகிறார்கள். நீயும் அதற்கு பலியாகாதே.

உனக்கு வீட்டில் வரன் பார்த்திருப்பதாக சொல்லிவிட்டு, அவரிடமிருந்து விலக முயற்சி செய். இதிலிருந்து விடுபட்டால் மற்றவையெல்லாம் தானாக அமையும்.

-அன்புடன்

சிக்கிTrending Now: