பொருளாதார வீழ்ச்சிக்கு பாஜக தன்னை தவிர மற்ற அனைவர் மீதும் பழிபோடுகிறது : அபிஷேக் சிங்வி குற்றச்சாட்டு

11-09-2019 04:33 PM

புதுடில்லி,

   நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்ததற்கு பாஜக தனது மோசமான பொருளாதார நிர்வாகத்தை குறைக்கூறாமல் மற்றவர்கள் மீது பழி போடுகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் மாருதி சுசூகி, அசோக் லேலாண்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இதனால் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

ஆட்டொமொபைல் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்தது ஆகியவற்றிக்கு பாஜக அரசின் மோசமான நிர்வாகமே காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது நாட்டில் பெரும்பாலான மக்கள் சொந்த காரை வாங்கிவிட்டு அதற்கான மாத தவணை கட்டுவதற்கு பதிலாக ஓலா, உபர் போன்ற டாக்சி சேவைகளை பயன்படுத்துகிறார்கள். வாகன விற்பனை கடும் சரிவை சந்தித்ததற்கு இதுவும் ஒரு காரணம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன் கூறியதை விமர்சித்து காங்கிரஸ் கட்சி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

நாட்டில் பேருந்து மற்றும் லாரிகளின் விற்பனை சரிந்ததற்கும் பெரும்பாலான மக்கள் அதை முன்பு போல் வாங்காதது தான் காரணம். அப்படிதானே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே ? என்று காங்கிரஸ் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் மத்திய அரசின் மோசமான கொள்கைகளால் கடந்த 100 நாள் ஆட்சியில் முதலீட்டாளர்களின் 12.5 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்கள் மொத்தமாக பறிபோய்விட்டது. நிதி அமைச்சர் கூறும் சாக்குகள் எதுவும் உண்மையல்ல. பொருளாதார வீழ்ச்சிக்கு ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் வரி தீவிரவாதம் ஆகியவை தான் காரணம் என்று காங்கிரஸ் தன்னுடைய மற்றொரு டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

அபிஷேக் சிங்வி குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தன் டுவிட்டர் பக்கத்தில் நிர்மலா சீதாராமன் கூறியதை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதன் விவரம்:

மத்திய நிதி அமைச்சர் பாஜகவின் மோசமான பொருளாதார நிர்வாகத்தை கூறை கூறாமல் வாக்களித்த மக்களை குறை கூறுகிறார். மிக சிறப்பு

மோடிஜீயின் டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டிவிட்டது. அதேபோல் நாளை இந்தியாவின் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலரை எட்டும் அப்படி தானே ?ஆனால் அது எவ்வாறு நடக்கும் ? இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இதற்கும் எதிர்க்கட்சிகள் தான் காரணம் என கூறுவீர்களா ?

ஓலா மற்றும் உபர் சேவைகள் தான் அனைத்தையும் சீரழித்துவிட்டது என கூறுகிறீர்கள். நாட்டில் என்ன நல்லது நடந்தாலும் அதற்கு நாங்கள் தான் காரணம் என பிரதமர் மோடி கூறுகிறார். நாட்டில் என்ன கெடுதல் நடந்தாலும் அதற்கு மற்றவர்கள் தான் காரணம் என நிர்மலா சீதாராமன் கூறுகிறார். பின் எதற்காக மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர் ? என்று அபிஷேக் சிங்வி டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 Trending Now: