ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக்கொலை

11-09-2019 04:19 PM

ஸ்ரீநகர்

  ஜம்மு காஷ்மீரின் பராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய பங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை, பாதுகாப்புப் படையினர் அந்த பகுதிக்கு விரைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இதனைக் கண்டு, அவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்புப்படை வீரர்களும் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

இருதரப்பினருக்கும் இடையில் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

பயங்கரவாதிகள் வீசிய குண்டுகள் வெடித்து சிதறியதில் பாதுகாப்புப் படையினர் 2 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட பயங்கரவாதி லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த ஆசிப் மக்பூல் பாட் என்பது தெரியவந்துள்ளது.

இவர் சோப்பூரில் பழ வியாபாரி வீட்டில் 4 பேரை துப்பாக்கியால் சுட்டது மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளி ஷபி ஆலமை சுட்டதில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது.

சோப்பூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின்போது, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதுTrending Now: