சென்னையில் பயங்கரவாத தலைவன் கைது: ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்

10-09-2019 04:07 PM

சென்னை,

வங்கதேசத்தைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட ஜமாஅத் அல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவன் அசதுல்லா ஷேக் (35) என்ற ராஜா சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) கைது செய்யப்பட்டான்.

சென்னை - நீலாங்கரையில் 10 மாதங்களாக கட்டுமான தொழிலாளர் என்ற போர்வையில் பதுங்கி இருந்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசதுல்லா ஷேக் என்ற ராஜாவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர்.

சென்னை நீலாங்கரையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஷேக் அசதுல்லா ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். மேலும் அசதுல்லா ஷேக்கை ஹைதராபாத்திற்கும் பிகாருக்கும் அழைத்துச் சென்று விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

2013ஆம் ஆண்டில் பீகார் மாநிலம் புத்தகயாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில் வெளிநாட்டுப் பயணிகள் உள்பட பலரும் காயமடைந்தனர், இந்த குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டவர் அசதுல்லா ஷேக் என்பது குறிப்பிடத்தக்கது.