இரண்டு – மதிஒளி

09-09-2019 06:12 PM


‘‘அவன் பொய்தான் பேசுகிறான் என்று நம்புவதற்கு காரணமிருக்கிறது. காரணமிருந்தால்தான் பொய்யை பேசவும் முடியும், கண்டுபிடிக்கவும் முடியும். மறைப்பதனால் காரணங்கள் மங்கிப் போவதில்லை.

‘‘உன்னால் ஏன் வரமுடியவில்லை என்பதற்குக் குறிப்பாக காரணம் ஏதாவதிருக்கிறதா?’’ அவசியமான எதிர்பார்ப்பும், அதன் விளைவான ஏமாற்றமும் சில நேரங்களில் வெறும் செய்தியாக மட்டும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. தவிர்க்கக்கூடிய காரணமாயிருந்தால் பின் நிகழ்வுகளுக்கு அது எச்சரிக்கையாகக்கூடும்.

‘‘நான் நேரங்கழிந்து வந்ததற்கு காரணம்  பேருந்தை தவறவிட்டதுதான்’’ என்பார். இது நியாயமான காரணமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நேரம் தவறாமைதான் ஒழுக்கத்தின் உயர்ந்த நோக்கம். எல்லா இடைஞ்சல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற உணர்வுடன்தான் நேரத்தை நாம் சரியாக திட்டமிட வேண்டும்.

‘‘அந்த பொருள் மிகவும் விலை அதிகமானது என்பதுதான் என் காரணம்’’ – சிக்கனத்தின் தெளிவான சிந்தனை இது. பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்களை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வாங்கும் பொருளின் தரத்தையும், அது எளிதாகக் கிடைக்கிறதா? அரிதாக இருக்கிறதா? அதன் அவசியமென்ன என்பவற்றை பொறுத்துத்தான் எந்த விலையும். இதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

‘‘எங்களால் அவ்வளவு செலவு செய்ய முடியாதென்பதுதான், நாங்கள் அங்கு போகாததற்குக் காரணம்’’. ஏன் செலவு செய்யக்கூடாது என்பது மிகவும் எளிதான கேள்வி. ஒருவருக்கு முடிந்தது இன்னொருவருக்கு முடியாததாக இருக்கலாம். ஒருவருடைய கேளிக்கை செலவு, இன்னொருவருக்கு இன்றியமையாத செயலுக்கு மிகவும் உதவக்கூடியதாக இருக்கலாம். ‘முடியாது’ என்றால் அவ்வளவுதான் முடியுமென்பதற்கு எல்லைக்கோடு.

‘‘தனக்களிக்கப்படும் சம்பளம் மிகக்குறைவு என்பதற்கு அவன் சரியான காரணங்களை சொன்னான். ஆம்! காரணம் சொன்னால்தான் கண்டுகொள்ள முடியும். அந்த காரணம் சரியாக இருந்தால்தான் காரியம் எளிதில் கைகூடும். ‘‘வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்.’’

‘‘மனிதனுக்குத்தான் எதற்கும் காரணம் சொல்லத் தெரிகிறது.’’ வாய் பேசத் தெரிந்த மனிதனுக்கு முதல் வருமானம், அதுவும் மிகப்பெரிய வருமானம், இந்த காரணத்தை கண்டுபிடித்துக் கொண்டேயிருப்பதுதான்.

காரணமும், காட்சியும் நீதியின் துலாக்கோலுக்கு இருபுறமுள்ள தட்டுக்களாக அமைந்துள்ளன. தவறுகள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் இந்த ‘காரணம்’தான் கருப்பொருளாக உள்ளது.

‘‘அவனுடைய காரணத்தை கேட்டு நான் பயந்துவிட்டேன்’’– இது ஒரு அதிர்ச்சிக் குறிப்பு. சில காரியங்கள் மேலோட்டமாக பார்க்கும்போது அர்த்தமற்றதாக தோன்றும். அனாவசியமாகத் தோன்றும். ஆபத்து விளைவிக்கக்கூடியதாகத் தோன்றும்.

அதனால் நாம் ஒருவருடைய செயலை இகழவும் அது காரணமாகும். தவறை சுட்டிக் காட்டும்போது அது திருத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே நமக்கிருக்க வேண்டும்.

திரும்பத்திரும்பத் தவறையே சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தால், அதுவும் அந்த தவறு உண்மையில் தவறாக இல்லாமலுமிருந்தால், குற்றம் சுமத்தப்பட்டவர் மனமும், அதனால் மூளையும், கலங்கக்கூடும். ஆகையால் தவறுகள் உண்மையிலேயே தவறுகள்தானா என்றாராய்ந்து முடிவு செய்து, மனதில் படும்படி அதை திருத்தும் வழியை அழுத்தமாக ஒரேயொரு முறை எடுத்துச் சொன்னால் போதும். ஏளனம் செய்ய வேண்டாம்.

எத்தனையோ எதிர்பார்ப்புடன்தான் வளர்க்கப்படுகிறோம். ஆனால், அத்தனையும் அப்படியே அமைந்து விடுவதில்லை. ஆர்வமின்மையை காரணமாக்க முடியாது. அலட்சியம்தான் காரணம். வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. வரவழைத்து கொள்வது வாழ்க்கையில் முன்னேற வரும் வளமான வாய்ப்பு. விழிப்புணர்வு ஏற்படுவதற்கு ஒருவர் முதலில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்தவர் அறிவுரையை தேவைக்குகந்து தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

வழிநடத்தும் பெருங்கருணை  பேராதரவின்  பேரருளைப்  பின்பற்றுவதில் மனம் எந்தவிதமும் பேதலித்து விடக்கூடாது. சிறிய குறைகளையும் திறமையாக மாற்றவும், பெரிய செயலில் பெயர் வாங்க வைக்கவும் இதுவே எளிய வழி. இதுவே தெளிவின் மொழி.