துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 45

06-09-2019 03:28 PM

சுதந்திர போராட்ட வீரர் டாக்டர். வரதராஜூலு நாயுடு

தமிழ்நாட்டை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் குறிப்பிடத்தகுந்தவர் டாக்டர். வரதராஜூலு நாயுடு. ராஜாஜி, பெரியார், திருவிக, சர்க்கரைச் செட்டியார், எஸ். சீனிவாச ஐய்யங்கார் போன்ற முன்னணித் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட இவர் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர்.

சுதந்திர வேட்கையோடு தனது வாழ்க்கையை அர்ப்பணித்து போராடிய வரதராஜுலு குறித்து இந்த வாரம் காண்போம்.

தமிழ்நாட்டில் ஜஸ்டிஸ் கட்சி தோன்றிய அதே காலகட்டத்தில் 1917–ம் ஆண்டு  திவான்பகதூர் கேசவபிள்ளை தலைமையில் ‘‘சென்னை மாகாண சங்கம்’’ என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சுதந்திரக் கோரிக்கைக்கு ஆதரவாக செயல்படுவது என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் துணைத் தலைவர்களாக ஈவெரா பெரியார் மற்றும் டாக்டர் வரதராஜுலு நாயுடு ஆகியோர் இருந்தனர்.

தொழிலாள வர்க்கத்தின் மீதும் அதிக ஈடுபாடு கொண்டிருந்த வரதராஜூலு அதே 1917–ம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தை தொடங்கினார். அந்த காலகட்டத்தில் நாகப்பட்டினத்தில் இருந்த ரயில்வே ஒர்க் ஷாப், பின்னர் திருச்சிக்கு மாற்றப்பட்டது. தொழிற்சங்க ஈடுபாட்டுடன் சென்னை மாகாண சங்க வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட இவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு சமூக சேவைகளிலும், சுதந்திர போராட்டங்களிலும் பங்குபெற்றார்.

எழுத்துத் துறையிலும் ஆர்வம் கொண்ட இவர், ‘பிரபஞ்சமித்திரன்’ எனும் பெயரில் தமிழ் பத்திரிக்கை ஒன்றை சேலம் நகரில் நடத்தி வந்தார். அதில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதிக்கப் போக்கையும், தொழிலாளர் விரோதப் போக்கையும் கண்டித்து மிக கடுமையான விமர்சனக் கட்டுரைகளை எழுதி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பத்திரிகைக்கு ஜாமீன் தொகையாக அரசுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த தொகையை செலுத்தாவிட்டால் பத்திரிகை நடத்துபவருக்கு ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்திருந்தனர். ஆனாலும் வரதராஜூலு ஜாமீன் தொகையை செலுத்த மறுத்தார். இதனால் 1918–ம் ஆண்டு ஆகஸ்ட் 22–ம் தேதி இவரை திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்து வழக்குப் போட்டனர். இந்த வழக்கில், வரதராஜூலுக்காக ராஜாஜி ஆஜராகி வாதாடி வழக்கிலிருந்து விடுவித்தார். ஆனாலும், மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வரதராஜூலு பேசியதற்காக நான்கு மாத சிறைத்தண்டனை விதித்தனர். இவர் சிறையில் அடைக்கப்பட்ட தகவல் வெளியானதும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் போராட்டம் நடைபெற்றது.

மதுரையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். ஆங்காங்கே மதுரை மாநகர் முழுவதும் ஆர்ப்பாட்டம், மறியல் என நிலைமை கட்டுக் கடங்காமல் போனதால், ரிசர்வ் போலீசார்  வரவழைக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக, நீலமேக சுப்பையா என்ற இளைஞன் குண்டடிபட்டு மரணம் அடைந்தார்.

குண்டுக்காயத்துடன் மரணத்தோடு போராடிய நீலமேக சுப்பையாவைக் காண வந்த ராஜாஜி, மதுரை ஜார்ஜ் ஜோசப் உள்ளிட்ட காங்கிரஸ் முன்னணித் தலைவர்களிடம் பேசிய அந்த இளைஞன் ‘வரதராஜூலு நாயுடுக்கு எந்த ஆபத்தும் வராம பார்த்துக்குங்க அய்யா’ எனக் கூறி விட்டு உயிர் துறந்தாராம். அந்த அளவிற்கு அந்த பகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்றவராக வரதராஜூலு திகழ்ந்துள்ளார்.

ஒருமுறை மதுரையில், வரதராஜூலு நாயுடு மீது புகார் ஒன்றை பதிவு செய்த போலீசார், அவருக்கு எதிராக சாட்சி சொல்ல யாரும் வராத நிலையில், அரசின் பிராசிகியூசன் தரப்பில், எம்.டி.சுப்பிரமணிய முதலியார் என்ற முக்கிய பிரமுகரை சாட்சியாக அறிவித்திருந்தனர். இவர் பிரபல ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் சர்.பி.டி.ராஜனின் சித்தப்பா ஆவார். இவரும் ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தார். ஆனாலும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வரதராஜூலுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்து விட்டார். நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு வரும் ஒரு தேசியவாதிக்கு எதிராக சாட்சி சொல்லி, அவருக்கு சிறைத் தண்டனை பெற்றுத்தர சுப்பிரமணிய முதலியார் விரும்பவில்லை. அன்றைய கால கட்டத்தின் அரசியல் நாகரீகம் அவ்வாறு இருந்தது.

மற்றும் ஒருமுறை வேறு ஒரு வழக்கில் கைதான வரதராஜூலுவை மதுரை சிறையில் அடைத்த பிரிட்டிஷார் அவரை அங்கு சித்திரவதைக்கு ஆளாக்கினர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத வரதராஜூலு சிறை வளாகத்திற்குள் நடக்கும் கொடுமைகளை ரகசியமாக கசிய விட்டு அது, அன்றைய செய்தித்தாள்களில் பரபரப்பாக வெளியானது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறை அதிகாரிகள் சிறைக் கட்டுப்பாட்டை அவர்  மீறி விட்டதாகக் கூறி இரண்டு வாரங்கள் தனிமை கொட்டடியில் அடைத்து வைத்தனர். இந்த செய்தியும் வெளியில் பரவி, மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தன. காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், மற்றும் அப்போதைய ராமநாதபுரம் ராஜா உள்ளிட்டோர்  வரதராஜூலுவை விடுதலை செய்ய வேண்டும் அல்லது மதுரை சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்றி, அவரை கவுரமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த விஷயத்தில், அன்றைய சென்னை மாகாண கவர்னராக இருந்த வெலிங்டனும் தலையிட்டதால், வரதராஜூலு மதுரை சிறையிலிருந்து திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரியாதையாக நடத்தப்பட்டார்.

ஒரு கட்டத்தில், அதாவது 1923–ம் ஆண்டில், அப்போதைய மதுரை கலெக்டர், வரதராஜூலு நாயுடு மதுரை மாவட்டத்துக்குள் நுழையக் கூடாது என்றே உத்தரவு போட்டிருந்தார். அந்த சமயத்தில் மதுரை மாவட்டம் (இன்றைய தேனி மாவட்டம்) உத்தமபாளையம் நகரத்தில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டுக்கு டாக்டர் வரதராஜூலு நாயுடு தலைமை தாங்குவதாக அறிவிப்பு செய்திருந்தனர். அவரும் கலெக்டரின் தடை உத்தரவை மீறி அந்த மாநாட்டிற்கு தலைமையேற்று வெள்ளை ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக ஆவேச உரை நிகழ்த்தினார். உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்துக் கைது செய்து 9 மாத சிறைத்தண்டனை வழங்கினர்.

தேச விடுதலைப் போராட்டங்களில் தீவிரமாக இருந்த போதும், தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டார். 1924  பிப்ரவரி ௨–ம் தேதி சென்னையில் நடைபெற்ற சென்னை மாகாண தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்றார்.  1926–ம் ஆண்டு அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் என்ற பேரமைப்பு உருவாக இவர்தான் மூலகாரணமாக இருந்தார். இன்றைய அனைத்து தொழிற்சங்கங்களும், இந்த பேரமைப்பில் இருந்து உருவானதுதான். வரதராஜூலு தொடங்கிய பத்திரிகையில் அச்சுக்கோர்க்கும் தொழிலாளியாக பணியாற்றியவர்தான் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தமிழ்நாடு மட்டும் அல்லாமல் தேசிய அளவிலான முன்னணித் தலைவர்களோடு மிக நெருக்கமாக பழகி அவர்களின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்ற தியாகிதான் டாக்டர். வரதராஜூலு நாயுடு.Trending Now: