இது உங்கள் இடம்! 19–5–19

05-09-2019 06:25 PM

வேண்டாம் சால்வை, கதர் துண்டு பெஸ்ட்!

அரசு விழாக்கள், பணிநிறைவு விழாக்கள் மற்றும் தனியார் விழாக்களிலும் சால்வை அணிவிக்கும் போது கதர் துண்டுகளை பயன்படுத்தினால் அவை அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் அதனால் கதர் நெசவுத்தொழிலும் சிறந்து விளங்கும். இதே போல் பொக்கேக்கு பதிலாக கதர் துண்டுகள் கொடுத்தால் நன்றாக இருக்கும் அல்லது பக்கத்தில் உண்டியல் வைத்து ஏழைகளுக்கு அதில் வரும் பணத்தை செலவழிக்கலாம்!

-– அசோக், பாளையங்கோட்டை.

மனிதாபிமானம் – கிலோ என்ன விலை?

திருநெல்வேலியில் அரசு ஊழியராக பணிபுரியும் நான் தினமும் பஸ்சில் சென்று வருகிறேன். ஒரு நாள் இரவு 7 மணிக்கு சங்கரன்கோவில் டூ சங்கரன் செங்கோட்டை பேருந்தில் ஏறினேன். நகரம் டிக்கெட் கேட்டபோது அங்கு நிற்க முடியாது என்று சர்வாதிகார தோரணையில் கூறிய கண்டக்டர், உடனே பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடுமாறு கேட்டும் நிறுத்தாமல் வண்டியை எடுத்து விட்டார்கள். பலர் கூறியும் கேட்காமல் சங்கரன் கோவில் டிப்போவில் இறக்கி விட்டு விட்டனர்.

பெண் என்றும் பாராமல் தனியாக இறக்கி விட்டது அதிர்ச்சியாக இருந்தது. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இறக்கி விட்டது மனிதாபிமானமற்ற செயலாக உள்ளது. அவர்கள் வீட்டு பெண் வந்தால் இப்படித்தான் இறக்கி விடுவார்களா? என்றுதான் திருந்துவார்களோ?

– தமிழ் இனியா, முள்ளிக்குளம் வழி.

உறவுகள் மேம்பட...

பள்ளித் தோழியை நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்தேன். திருச்சியில் இருக்கிறாள். கணவருக்கு நல்ல உத்தியோகம், இரண்டு பெண் பிள்ளைகள். உறவுக்காரர்கள் பற்றிய பேச்சு வந்ததும் உற்சாக குஷியில் பேசினாள்.

‘‘அவரோட சொந்த பந்தம்னு யாரு வந்தாலும் சரி, முகம் கோணாம விழுந்து விழுந்து கவனிப்பேன்டீ! அவங்க உறவுமுறையில் ரொம்ப கஷ்டப்படுறவங்களுக்கு பண உதவி செய்ய அவரை திரும்ப திரும்ப நினைவுப்படுத்துவேன். சந்தோஷப்பட்டு என்னைப் பாராட்டுவாரு... இதனால எனக்கு இன்னொரு லாபம்.... என்னன்னு சொல்லு பார்ப்போம்?’’ என்று புதிர் போட்டாள். நான் யோசித்து திணறுவதை பார்த்து, அவளே விடை அளித்தாள் ‘‘நான் இப்படி நடந்து கொள்வதால் என்னோட உறவுகளை அக்கறையா – அன்பா நடத்துறாரு.

போன மாசம் கூட என் துாரத்து ரிலேஷன் பிளஸ் 2விலே நல்ல மார்க். அவங்க கஷ்டம் அறிஞ்சு அந்த பையனை காலேஜ்ல சேர்க்க ஆலோசனை கொடுத்தாரு. கணிசமான தொகையும் தந்து உதவி பண்ணினாரு. நான் ஒரு வார்த்தை  கூட சொல்லாம அவரே செஞ்சாரு பாத்துக்கோ...’’ இதைக் கேட்டபோது இதமாக இருந்தது மனதுக்கு. இல்லற வெற்றியின் ரகசியமும் புரிந்த மாதிரி இருந்தது. உறவுகள் மேம்பட என் தோழி பின்பற்றும் அறிவுபூர்வமான அணுகுமுறை நல்ல பாடம் நமக்கு. வாழ்க வளமுடன்.

– இ. கஸ்துாரி, அகஸ்தியர்பட்டி.

உனக்கு நீயே கொடு!

ஆன்மிக சொற்பொழிவு.... ‘கர்ணன்’ என்ற தலைப்பில் ஒரு பேச்சாளர் இரண்டரை மணி நேரம் அருமையாக பேசினார். நிகழ்ச்சி முடிந்து ஹாலுக்கு வெளியே வந்து கொண்டிருந்தேன். மீட்டிங் பற்றி இரண்டு பேர் சீரியசாக உரையாடியவாறே நடந்தனர். உற்றுக் கேட்டேன்.

‘‘கொடுப்பதில்தான் சந்தோஷமும், வாழ்வின் அர்த்தமும் இருக்குன்னு சொல்றாரு. தனக்கே தானம் போடும் போது மத்தவங்களுக்கு எப்படி கொடுத்து மகிழ முடியும்?’’ என்று கேட்டவுடன் அடுத்தவர் தயக்கமே இல்லாமல் அடுத்த கணத்தில் பதில் சொன்னார் பாருங்கள். அசந்து போனேன்!

‘‘பிறருக்கு கொடுக்க பொருள் இல்லையா... கவலை வேண்டாம். உனக்கு நீயே கொடுத்துக் கொள்ள பழகு. நுரையீரலுக்கு பிராணாயாமம் கொடு. குடலுக்கு ஆரோக்கியமான உணவு கொடு. இதயத்துக்கு அதிகாலை நடைப்பயிற்சி கொடு. உடலுக்கு யோகாசனம் கொடு. மனதுக்கு நல்ல எண்ணங்களையும், தியானத்தையும் கொடு. இப்படி கொடுத்து கொடுத்து உன்னை நீயே வலிமை உள்ளவனாக ஆக்கிக் கொள். மற்றவருக்கு கொடுக்கும் அளவுக்கு செல்வம் உன்னிடம் வந்து சேரும்!’’ என்ன அருமையான கருத்து!

– பி.ஜி.பி. இசக்கி, பொட்டல்புதுார்.Trending Now: