அரசனின் எளிமை!

04-09-2019 05:21 PM

நல்லான்பிள்ளை நாட்டு அரசர், நீண்ட நாள் வாழ ஆசைப்பட்டார். அகந்தை அழித்தால், ஆயுள் அதிகரிக்கும் என, அறிந்திருந்தார். பணமும், படாடோபமும் அதிகரிக்கும் போது தான், அகந்தை வருகிறது. எளிமையான வாழ்க்கையே உயர்வு தரும் என்ற முடிவுக்கு வந்தார்.

உடனே, ஆடம்பர அரண்மனையையும், ஆடைகளையும் துறந்தார். ஒரு சிறிய குடிசையில் தங்கியபடி, 'என்னை யாரும் வணங்கக் கூடாது' என்று, ஒரு உத்தரவும் பிறப்பித்தார் அரசர்.

நாட்கள் சென்றன -

அரசர், தன் வாழ்க்கையை எண்ணிப் பார்த்து, 'தன்னைப் போல், எளிமையாக வாழ்பவர் யாருமில்லை' என்ற அகந்தை ஏற்பட்டிருப்பதை உணர்ந்தார். இதை, ஒரு ஞானியிடம் கூறி, பரிகாரம் தேட வழி கேட்டார்.

அந்த ஞானி, 'அரசரைப் போல் உடுத்து; அரசரைப் போல் வாழ்; அரசர் என்ற மரியாதையை, மக்கள் கொடுக்கட்டும். ஆனால், மனதளவில் எளிமையாக இரு... அகந்தையுடன் நடக்கும் பணக்காரர்களை, ஏழைகள் வெறுக்கின்றனர்; அதே ஏழைகள், செல்வந்தர் ஆனதும், அகந்தையுடன் நடக்க ஆரம்பிக்கின்றனர்...' என்று அறிவுரை சொன்னார்.

வாழ்க்கையை உணர்ந்த அரசர், எளிமையாகவும், பண்பாகவும் நடக்க பழகிக் கொண்டார். மக்கள் மதிக்கும் மன்னராக அரசாட்சி புரிந்தார்.

குட்டீஸ்... பணம் இருக்கிறது என்ற அகந்தையில், மற்றவர்களை கேவலமாக நடத்துபவரின் வாழ்வில் துன்பமே நிறைந்திருக்கும். சரியா!

–- ஸ்ரீ செண்பகா பதிப்பகம்!Trending Now: