மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 169

03-09-2019 05:06 PM

புகழ்துணையாரின் உரிமைத் தொண்டைப் பார்ப்போம்.

 செருவிலிப்புத்தூரில் – இது ‘அரிசிற்கரைப் புத்தூர்’ என்றும் ‘அழகாத்திரிபுத்தூர்’ என்றும்,  ‘அழகார்புத்தர்’ என்றும் வழங்கப்படுகிறது. இத்தலம் கும்பகோணத்திற்குத் தெற்கில் குடவாசலுக்குச் செல்லும் பெருவழியில் சுமார் ஐந்து மைலில் உள்ளது. இங்கே சிவவேதியர் குலத்தில் ஒரு பெரியார் இருந்தார். அவர் மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமானுக்கு அகம்படிமைத் தொண்டு அதாவது இறைவன் திருமேனி தீண்டுதல், திருமஞ்சனம் எடுத்தல், அலங்கரித்தல், நிவேதித்தல், பூசித்தல், கர்ப்பக்கிரகத்தைச்  சுத்திபுரிதல் முதலியன செய்து வந்தார். அவர் பெயர் புகழ்துணையார்.

 புகழ்துணையார், சிவபெருமானை சிவாகம விதிப்படி அர்ச்சித்து வழிபட்டு வரும் நாளில் உலகில் பஞ்சம் தோன்றியது. மக்கள் யாவரும் உணவின்றிப் பசியால் மிகவும் வருந்தினர். புகழ்துணையாரோ ` எமது பெருமானை நான் விடுவேனல்லேன்’ என்று குளிர்ந்த நீரினைக் கொண்டும் பன்மலர் கொண்டும் இரவு, பகலாக இறைவனை அர்ச்சித்து வந்தார்.  ஒரு நாள் அவர் சிவபெருமானுக்கு திருமஞ்சனம் ஆட்டி கொண்டிருக்கும் போது, மிகுந்த பசி நோயால் வருந்தி, நிலை தளர்ந்து, திருமஞ்சனக் குடத்தைத் தூக்கமுடியாமல் கைதவறி, சிவபெருமானுடைய திருமுடியின் மீது விழுந்துடையும்படி கை நழுவவிட்டு விட்டு, நடுநடுங்கிச் சோர்ந்து தாமும் விழுந்தார். சங்கரர் தம் திருவருளால் அவருக்கு ஓர் உறக்கம் வந்தது. சிவபெருமான் அவரது கனவில் தோன்றி ‘இந்த பஞ்சகாலம் தீரும் வரை உனக்கு நாம் நாள்தோறும் ஒவ்வொரு பொற்காசு இங்கு வைப்போம்’ என்று கூறி மறைந்தார். புகழ்துணை நாயனார் துன்பம் நீங்கி, துயில் நீங்கி எழுந்தார். அப்போது சிவபெருமான் தமது பீடத்தின் கீழே, ஒரு பொற்காசு எழுந்தருளினார். பெரும்பசியினால் வாடிய புகழ்துணையார், அந்தக் காசை கைக்கொண்டு முகமலர்ச்சி பெற்று மகிழ்ந்தார்.

 இவ்வாறு பஞ்சம் நீங்கும் வரை, இறைவர் நாள்தோறும் அளித்து வந்த பொற்காசைக் கொண்டே துன்பம் நீங்கியபின், சிவபெருமானுக்கு அகம்படித் தொண்டு புரிந்து, புகழ்துணையார் பலகாலம் வாழ்ந்தார். பிறகு தேவர்கள் சேரும்படியான சிவபெருமானின் திருவடியில் சேர்ந்து இன்புற்றார்.

மாதொரு பாகரை மனத்துணையாகக் கொண்டு பெரும்பேறு பெற்ற புகழ்துணை யாரின் மலரடிகளை வாழ்த்திவிட்டு அடுத்ததாக தனிப்பெரும் வீரரான கோட்புலியாரின் செயலுரைப்போம்.

 சோழவள நாட்டிலுள்ள திருநாட்டியத்தான் குடியிலே வேளாளர் மரபினில் கோட்புலியார் – இவர் சுந்தரமுர்த்தி நாயனாருக்கு மிக்க நண்பர் என்பதன் வரலாற்றை ஏயர்க்கோன் கலிக்காம நாயனார் வரலாற்றில் பார்க்கலாம். இப்படி ஒரு பெரியார் இருந்து வந்தார். அவர் சோழ மன்னரது சேனைத் தலைவராக விளங்கினார். பகைவர்களை எதிர்த்து போரிட்டு, புகழும் வெற்றியும் கொண்டு வந்தார். அரசரிடம் தாம் பெறும் சிறந்த செல்வ வளங்களையெல்லாம் கொண்டு சிவபெருமானின் திருக்கோயில்கள் தோறும் திருவமுதுக்குரிய செந்நெல்லை வாங்கி நெல்லை மலைச் சிகரம் போல் சேமித்து வைப்பார். அதுவே அவருடைய தனிப்பெரும் திருத்தொண்டு. அத்திருப்பணியை அவர் நெடுங்காலம் செய்து வந்தார்.

 இவ்வாறு திருப்பணி செய்து வரும் காலத்தில் அவர் அரசனது ஆணையை ஏற்று, போர்முனைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. அப்போது சிவபெருமானின் திருவமுதுக்காக  தாம் திரும்பி வரும்வரையில் தேவைப்படும் நெல்லை சேமித்து வைத்தார். பிறகு அவர் தமது சுற்றத்தார் எல்லோரையும் தனித்தனியே கூப்பிட்டு ‘‘சிவபெருமானுடைய அமுதுபடிக்காக நாம் சேமித்து வைத்துள்ள இந்நெற்கூடுகளை செலவழிக்கக் கூடாது. அப்படி செலவழிக்க உங்கள் மனத்தினாலாவது நினைத்தீரென்றால், திருவிரையாக்கலி அதாவது திருவருளாணை; சிவனது ஆணை.’’ விரையாக்கலி – ஆணை. உறுதிமொழி  ‘பொய்தீர் விரையாக்கலியெனும் ஆணையும்’ என்பது ‘கோயில் நான்மணி மாலை’ 4ம் பாடலில் அடி ஆகும்.

 இப்படி கூறி இறைவன் ஆணை வைத்துவிட்டுப் போர்முனைக்குச் சென்றார்.

 கோட்புலியார் போருக்குச் சென்ற சில நாட்க ளுக்கெல்லாம், அந்த நாட்டில் கொடும் பஞ்சம் வந்தது. கோட்புலியாரின் சுற்றத்தார் ‘உணவுப் பொருள் இல்லாமல் நாம் மாண்டு போவதைக் காட்டிலும் இறைவரின் திருவமுதுக்காக சேமித்து வைத்திருக்கும் நெல்லையெடுத்துப் பயன்படுத்திக் கொள்வோம்’ என்று நினைத்தார்கள்.