கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 194

26-08-2019 02:23 PM


 ஜெயிலுக்கு போய் வந்த சிரேஷ்டர் – 4

‘கப்­ப­லோட்­டிய தமி­ழன்’ திரைப்­ப­டத்­தில், சிவாஜி கணே­சன் எற்ற வ.உ.சிதம்­ப­ர­னா­ரின் வேடம் உண்­மை­யி­லேயே ஒரு சிரேஷ்­ட­ரின் வேடம்­தான்.

‘சிரேஷ்­டர்’ என்­றால் என்ன பொருள் என்று கேட்­டார் ஒரு­வர். இது தற்­கா­லக் கேள்வி. ஏனென்­றால், சென்ற நூற்­றாண்­டின் இடைப்­ப­கு­தி­யில் இந்­தக் கேள்வி எழ­வில்லை. உதா­ர­ணத்­திற்கு,

‘‘ஜெயி­லுக்­குப் போய் வந்த சிரேஷ்­டர்  

மக்­களை சீர்­தி­ருத்­து­வாங்கோ’’ என்று என்.எஸ்.கிருஷ்­ணன் பாடி­ய­போது,  அவ­ருக்கு அந்­தக் கேள்வி எழ­வில்லை. ‘சிரேஷ்­டர்’ என்­றால் சிறந்­த­வர் என்று அவர் அறிந்­தி­ருந்­தார், அவர் பாடி­ய­தைக் கேட்­ட­வர்­க­ளும் அறிந்­தி­ருந்­தார்­கள்.  

நிஜ­மா­கவே இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேல், கொலை குற்­றத்­தில் சிறை சென்று வந்த பிறகு, மீண்­டும் ‘பைத்­தி­யக்­கா­ரன்’ என்ற திரைப்­ப ­டத்­தில் என்.எஸ்.கிருஷ்­ணன் நடித்­த­போது, தன்­னு­டைய ஜெயில் வாசத்­தைப் பற்றி, ஒரு பாடல் வாயி­லாக சில கருத்­துக்­களை முன்­வைத்­தார். தான் குற்­ற­மற்­ற­வர் என்­ப­தைக் கூற அவர் பயன்­ப­டுத்­திய அந்­தப் பாட­லின் பல்­ல­வி­தான், ‘ஜெயி­லுக்­குப் போய் வந்த சிரேஷ்­டர்’. காந்­தி­யார் காலத்­திலே சுதந்­தி­ரப் போராட்­டத்­தில் பலர் பங்­கெ­டுத்து சிறை சென்­றார்­கள். அவர்­க­ளைத்­தான்  இந்­தப் பாட­லில் சிரேஷ்­டர்­கள், சிறந்­த­வர்­கள் என்று கிருஷ்­ணன் பாடி­னார்.

தேசிய போராட்­டத்­தின் காந்தி அத்­தி­யா­யத்­தில் அதில் பங்­கெ­டுத்த தியா­கி­க­ளுக்கு அந்­தப் பெயர் பொருத்­த­மா­ன­து­தான். வெள்­ளைக்­கார ஆட்சி கூட அவர்­களை சிறை­யில் அடைத்­தா­லும் சித்­ர­வதை செய்­யாத காலம் அது.

அதற்கு முந்­தைய காலம் அப்­ப­டிப்­பட்­ட­தல்ல. சுதந்­திர உணர்ச்சி காட்­டி­ய­வர்­களை, ஜாலி­யன்­வா­லா­பாக்­கில் வைத்து குரு­வி­களை சுட்­டுத்­தள்ளி ­யதைப்­போல் சுட்­டுத்­தள்­ளிய காலம். வீர சாவர்க்­கர் போன்­ற­வர்­களை அந்­த­மான் சிறை­யிலே வைத்து சின்­னா­பின்­ன­மாக்­கிய காலம் அது. அந்­தக் காலத்­தில், வ.உ.சிதம்­ப­ரம் பிள்ளை வெள்­ளைக்­கா­ர­னுக்கு எதி­ரா­கக் கப்­பல் ஓட்­டி­யும் கிளர்ச்சி செய்­தும் போரா­டி­ய­போது, ஆட்­சி­யின் பொல்­லாத கோபத்­திற்கு ஆளா­னார்.

‘‘தண்­ணீர் விட்­டோம் வளர்த்­தோம், இப்­ப­யிரை கண்­ணீ­ரால் காத்­தோம், கரு­கத்­தி­ரு­வு­ளமோ’’ என்று, சிதம்­ப­ர­னார் மீது சிறை­யில் குவிக்­கப்­பட்ட வாதை­க­ளைப் பற்­றிக்­கேட்­ட­றிந்த பார­தி­யார் குமு­றிய காலம் அது.

‘‘ஓரா­யி­ரம் வரு­டம் ஓய்ந்து கிடந்த பின்­னர்

வாரா­து­போல வந்த மாம­ணி­யைத் தோற்­போமோ,’’  என்று வ.உ.சியைக் குறித்து பாரதி கவ­லைப்­பட்ட காலம்.

‘மேலோர்­கள் வெஞ்­சி­றை­யில்

வீழ்ந்து கிடப்­ப­து­வும்

நூலோர்­கள் செக்­க­டி­யில்

நோவ­து­வும் காண்­கி­லையோ’ என்று சிதம்­ப­ர­னார் உள்­ளாக்­கப்­பட்ட கொடு­மை­க­ளைக் கேட்டு, பார­தி­யார்   ரத்­தக்­கண்­ணீர் வடித்த காலம். அனல் கக்­கும் வீர­பாண்­டிய கட்­ட­பொம்­ம­னாக மேடை­யி­லும் திரை­யி­லும் நடித்த பிறகு, தன்­னு­டைய தணிந்த நடிப்­பால் சிவாஜி சிதம்­ப­ர­னாரை சித்­த­ரித்­தார். அப்­போது, ஜி. ராம­நா­தன் இசை­யில் திருச்சி லோக­நா­த­னின் குர­லில் பார­தி­யா­ரின் மேலே குறிப்­பி­டப்­பட்ட வரி­கள் எல்­லாம் திரை­யில் அற்­பு­த­மாக ஒலித்­தன. ‘கப்­ப­லோட்­டிய தமி­ழ’­­­­­னில் சிவாஜி

நடித்த சிறை­வா­சக் காட்­சி­கள் மிக­வும் உருக்­க­மா­னவை.

தேச­பக்­தர் சிதம்­ப­ரம் பிள்ளை மீதும் அவ­ரு­டன் இணைந்து செய­லாற்­றிய சுப்­ர­ம­ணிய சிவா மீதும் ஆங்­கில அரசு  தேசத்­து­ரோ­கம், ராஜ­நிந்­தனை ஆகிய குற்­றங்­கள் சாட்டி, ஆயுள் தண்­டனை விதித்­தது. வ.உ.சிக்கு நாற்­பது ஆண்­டு­கள் இரட்டை ஆயுள் தண்­ட­னை­யும் சிவா­விற்கு இரு­பது ஆண்­டு­கள் தண்­ட­னை­யும் விதிக்­கப்­பட்­டது.

இவர்­களை முற்­றி­லும் முடக்­கிப்­போ­டு­ வ­து­தான் அந்த சிறைத்­தண்­ட­னை­யின் நோக்­கம். சிதம்­ப­ரம் பிள்­ளை­யைக் காவ­லர்­கள் செக்­கி­ழுக்க வைத்­தார்­கள்... கல்­லு­டைக்க வைத்­தார்­கள்.  ஆட்­டுத் தோல் கம்­ப­ளி­க­ளைக் சுண்­ணாம்­புத் தண்­ணீ­ரில் கழு­விக் கழுவி, தொழு­நோய்க்கு ஆளா­னார் சுப்­ர­ம­ணிய சிவா.

ஒரு நாள் வீட்­டி­லி­ருந்து வந்த ஒரு கடி­தம் வ.உ.சியி­டம் கொடுக்­கப்­பட்­டது. தந்தை கால­மா­கி­விட்­டார் என்ற செய்­தி­யைக் கூறி­யது கடி­தம். ஈமக்­க­டன்­க­ளைக்­கூட செய்­ய­மு­டி­யாத பாவி­யா­கி­விட்­டேன் என்று பிள்ளை துடிக்­கி­றார். ‘‘நான் சிறை­யிலே. தம்­பிக்கு சித்த பிரமை பிடித்­து­விட்­டது, தாயார் சோகப் படுக்­கை­யிலே கிடக்­கி­றார்...’’என்று தவிக்­கி­றார். தாய்­நாட்­டுக்­கா­கத் தன்­னையே கொடுக்க முன் வந்த தியா­கி­யின் நிலை இது.

சில வரு­டங்­கள் உருண்­டோ­டு­கின்­றன...ஒரு நாள் சிதம்­ப­ரம் பிள்­ளை­யின் சிறைக்­க­தவு திறக்­கி­றது..ஒரு சிறை ஊழி­யர் அவ­ரைப் பெய­ரிட்டு அழைக்­கி­றார். ‘‘உங்­க­ளுக்கு இன்­னைக்கு விடு­தலை,’’ என்­கி­றார்.

வெளியே பார்த்­துக்­கொண்டு, ‘‘இந்த நர­கத்­தி­லி­ருந்து எனக்கு விடு­தலை’’ என்று தனக்­குத்­தானே முணு­மு­ணுத்­துக் கொள்­கி­றார் சிதம்­ப­ரம் பிள்ளை.

‘‘என்­னய்யா இது? நாலரை வரு­ஷத்­துக்கு

அப்­பு­றம் விடு­த­லைன்னு சொல்­றேன்.....கொஞ்­சம் கூட சந்­தோ­ஷத்­தைக் காணோ மே....?’’ இது சிறைக்­கா­வ­ல­ரின் பேச்சு.

வ.உ.சி. - ‘‘ஹா...என்ன?....என் நாட்­டுக்கா விடு­தலை வந்­து­விட்­டது சந்­தோ­ஷப்­ப­டு­தற்கு? சந்­தோ­ஷ­மாம் சந்­தோ­ஷம்....’’

விடு­த­லைப் பெற்று சிறைக்கு வெளியே வரு­கி­றார் சிதம்­ப­ரம் பிள்ளை. அவர் கப்­பல் கம்­பெனி நடத்­திய போதும் ஆர்ப்­பாட்­டங்­கள் செய்­த­போ­தும் திரண்ட  மக்­க­ளில் யாரை­யும் காணோம் சிறை வாயி­லில் !

தேச­பக்­தர்  தில­க­மாக தன்­னு­டைய நல்­வாழ்­வின் சந்­தர்ப்­பங்­க­ளை­யெல்­லாம் நீத்து, சிறை புகுந்­த­வர் வெளியே வரும் போது, வாயில் வெறிச்­சோடி கிடக்­கி­றது! அவரை வீட்­டுக்கு அழைத்­துச் செல்ல வந்த உற­வி­னர் இதைக் குறிப்­பி­டு­கி­றார்.

‘‘இந்த நன்றி கெட்ட ஜனங்­க­ளுக்­காக

உயி­ரையே விடு­றேன்னு நீங்க சொல்­லு­றீங்க, யாரா­வது உங்­களை வர­வேற்க வந்­தி­ருக்­கி­றாங்­களா?’’ என்­கி­றார்.

‘‘என்னை எல்­லோ­ரும் வர­வேற்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவோ, மாலை­போட வேண்­டும் என்­ப­தற்­கா­கவோ நான் சிறை செல்­ல­வில்லை. பிறந்த மண்­ணின் விடு­த­லைக்­காக ஒவ்­வொரு மனி­த­னும் செய்­ய­வேண்­டிய கட­மை­யைத்­தான் நான் செய்­தேன்,’’ என்­கி­றார் சிதம்­ப­ரம் பிள்ளை.

‘‘இருந்­தா­லும், யாரா­லும் ஒரு­வ­ரா­வது வந்­தி­ருக்­காங்­களா...?’’என்று வந்­த­வர் மீண்­டும் கூறும் போது, ‘‘ஒருத்­தர் என்­னய்யா ஒருத்­தர்...எங்­கள் வீரத்­த­லை­வரை வர­வேற்க தமிழ் நாடே இங்கு வந்­தி­ருக்­கி­ற­தய்யா....’’என்ற குரல் ஒலிக்­கி­றது. அந்­தக் சொற்­க­ளைக் கூறி­ய­வரை பிள்­ளை­யும் அவரை வீட்­டுக்கு அழைத்­துப்­போக வந்­த­வ­ரும் பார்க்­கி­றார்­கள்.

இப்­படி பேசி­ய­வர் ஒரு தொழு­நோ­யாளி என்று கண்­ட­வு­டன், சிதம்­ப­ரம் பிள்­ளை­யின் உற­வி­னர்,   அவ­ரைப் பார்த்து, ‘‘யாரய்யா நீ, அப­ச­கு­னம் மாதிரி. முகத்­தைப் பாரு...மொத­மொ­தல்ல எதிர்ல வந்­துட்டே இல்லை...’’என்று கடு­க­டுக்­கி­றார்.  அவ­ரைப் பார்த்து, ‘‘கோபிக்­கா­தீர்­கள் ஐய்யா...உயிர் உயி­ரைத்­தேடி வந்­தி­ருக்­கி­றது’’, என்­கி­றார் வந்­த­வர்.

‘தாங்­கள்...’ என்று வந்­த­வரை அடை­யா­ளம் காண முற்­ப­டு­கி­றார் சிதம்­ப­ரம் பிள்ளை. ‘‘உங்­க­ளுக்­குக் கூட என்­னைத் தெரி­ய­வில்­லையா பிள்­ளை­வாள்,’’ என்­கி­றார் வந்­த­வர்.

‘‘எனக்கு மிக­வும் பழக்­கப்­பட்ட குரல் போல் இருக்­கி­றது..... உம்ம்ம்........ யார் நீங்­கள்?’’ என்­கி­றார் சிதம்­ப­ரம் பிள்ளை!

‘‘கட்­டி­ழந்து களை­யி­ழந்து காய்ந்த சரு­காக நிற்­கும் நான்­தான் உங்­கள் சிவம்,’’ என்­கி­றார் வந்­த­வர். வ.உ.சி. - ‘‘ஹா...சிவமா! எங்­கள் தேச­பக்த சிங்­கம் சுப்­ர­ம­ணிய சிவமா! வைர உடல் படைத்த வீரச்­சி­வமா இது!  வெண்­க­லக்­கு­ர­லால் வெள்­ளை­யனை நடுங்க வைத்த வீரத்­தி­யா­கமே, உனக்கா இந்த கதி? சிவம், சிவம் என்­னய்யா இது?’’

சிவம் - ‘‘வெள்­ளை­யன் சிறை கொடுத்த சீத­னம் பிள்­ளை­வாள், சிறை கொடுத்த சீத­னம். மாவீ­ரன் போல் உள்ளே போனேன். மயா­னப் பிண­மாக்­கி­விட்­டது மாற்­றா­னின் சிறைக்­கொ­டுமை. உடல் எல்­லாம் செல்­ல­றித்த சல்­லடை ஆகி­விட்­டது பிள்­ளை­வாள்...அன்னை பார­தத் தாயின்  திருப்­பணி ஒன்­றிற்­குத்­தான் இந்த உயிர் ஊச­லா­டு­கி­றது பிள்­ளை­வாள், உயிர் ஊச­லா­டு­கி­றது’’. வ.உ.சி. - ‘‘சிவம் சிவம்’’  (அழு­கி­றார்) (நெருங்­கு­கி­றார்)

சிவம் -- ‘‘வேண்­டாம்...வேண்­டாம்....என்­னைத் தொட­வேண்­டாம்...தொட்­டால் ஒட்­டிக் கொள்­ளும் தொழு­நோய்...’’

‘‘மாசு­ம­ரு­வற்ற உங்­களை வாட்­டும் இந்­தத் தொழு­நோய் என்­னைப் பற்­றிக்­கொள்­ளட்­டும். என்­னை­யும் பற்­றிக்­கொள்­ளட்­டும்’’ என்று கூறி­ய­வாறே, சிவம் அவர்­களை நெஞ்­சா­ரத் தழு­விக்­கொள்­கி­றார் சிதம்­ப­ரம் பிள்ளை!

பார­தத்­தா­யின் தலை­சி­றந்த இரண்டு பிள்­ளை­கள் சிறை­வா­யி­லில் தழு­விக்­கொள்­ளும் இந்­தக் காட்சி அற்­பு­த­மா­னது, ஆனந்­த­மா­னது, தேசப்­பற்­றுக் கொண்­ட­வர்­க­ளின் கண்­களை எல்­லாம் குள­மாக்­கக்­கூ­டி­யது, நெஞ்­சங்­களை இம­யம்­போல் நிமிர்த்­தக்­கூ­டி­யது.

சிவாஜி கணே­ச­னும், டி.கே.சண்­மு­க­மும் சிதம்­ப­ரம் பிள்­ளை­யா­க­வும் சுப்­ர­ம­ணிய சிவா­வா­க­வும் இந்­தக் காட்­சி­யில் நடித்­தார்­கள் என்று கூறு­வ­தை­விட,  இரு மகோன்­னத தேச­பக்­தர்­க­ளின் இத­யத்­து­டிப்பை நம் கண்­முன் கொண்­டு­வந்­து­விட்­டார்­கள் என்றே கூற­வேண்­டும்.

இவ்­வ­ளவு உன்­ன­த­மான காட்­சி­களை கொண்­டி­ருக்­கும் கப்­ப­லோட்­டிய தமி­ழன் திரைப்­பட

த்­திற்கு படு­தோல்­வியை  1961ம் ஆண்­டின் சினிமா ரசி­கர்­கள் வழங்­கி­னார்­கள் என்­றால், அவர்­க­ளு­டைய பெரு­மையை என்ன

சொல்­வது?!

‘கப்­ப­லோட்­டிய தமி­ழ’­­­­­னில் தியா­கி­யாக சிறைக்­குச் செல்­லும் சிவாஜி, ‘பலே பாண்­டியா’ படத்­தில், தன்­னைப்­போ­லவே இருக்­கும் மருது என்ற திரு­டன்  செய்த குற்­றத்­திற்­காக,  மூன்று மாத தண்­ட­னை­யில் சிறை­யில் அடைக்­கப்­ப­டு­கி­றார்.

தண்­டனை முடிந்து சிறை­யி­லி­ருந்து வெளியே வரும் போது அவரை ஒரு நண்­பர் (கே.பாலாஜி) பார்த்து விடு­கி­றார். ‘‘டேய்...நீயா...? என்­னடா இது....? ஜெயி­லுக்­குள்­ளே­யி­ருந்து வர்றே...,’’ என்று கேட்­கி­றார்! ‘‘அதெல்­லாம் ஒண்­ணும் இல்லை,’’ என்று விழிக்­கும் சிவாஜி, ‘‘ஜெயி­லுக்­குள்ளே என்­னோட நண்­பர் ஒருத்­தர் இருக்­கார்...தியாகி...அவ­ரைப் பாத்­துட்டு வந்­தேன்,’’ என்­கி­றார்!

தியா­கச் செம்­ம­லாக சிறையை விட்டு வந்த சிதம்­ப­ரம் பிள்­ளை­யின் தியா­கத்தை மெச்சி, அவரை உச்­சி­யில் வைத்து சுமக்­கும் நபர்­கள் அவர் காலத்­தில் இல்லை. ஆனால் அவர் தூல உடல் மறைந்த பிறகு அவ­ரு­டைய பெருமை நன்கு உண­ரப்­ப­டு­கி­றது... தியாகி என்ற முத்­தி­ரை­யும் கொஞ்­சம் பலன் தரு­கி­றது. ஆனால் உண்­மை­யான தியாக உணர்வு எப்­போ­தும் போல் மிக மிக அரி­தாக உள்­ளது.

(தொட­ரும்)

Trending Now: