பிற நாடுகளுக்கு எதிராக தீவிரவாதத்தை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்: இந்தியா – பக்ரைன் கூட்டறிக்கை

25-08-2019 06:58 PM

மனாமா,              

பிற நாடுகளுக்கு எதிராக தீவிரவாதத்தை பயன்படுத்தும் செயலை சில நாடுகள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என இந்திய பிரதமர் மோடி, பக்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலிஃபா வெளியிட்ட கூட்டறிக்கையில் பாகிஸ்தானுக்கு மறைமுகமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5 நாட்கள் அரசுமுறைப் பயணமாக, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக பிரான்ஸ் பயணத்தை முடித்து, ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாடு சென்றார். அந்நாட்டின் மிக உயரிய விருதான, 'ஆர்டர் ஆப் சயீத்' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, ஐக்கிய அரசு எமிரேட்ஸ் பயணத்தை முடித்த மோடி பக்ரைன் வந்தடைந்தார். பக்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலிஃபாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப்பேசினார். அப்போது மறுமலர்ச்சியின் மன்னர் ஹமாத் எனப்படும் ஆணையை (The King Hamad Order of the Renaissance) பிரதமர் மோடிக்கு மன்னர் ஹமத் பின் இசா அல் கலிஃபா வழங்கி கவுரவித்தார். பின்னர், அந்நாட்டு இளவரசர் கலிபா பின் சல்மானை சந்தித்துப்பேசினார். அப்போது இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர், பக்ரைன் மன்னரும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டறிக்கை வெளியிட்டனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா மற்றும் பக்ரைன் ஆகிய இரு நாடுகளும் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, தகவல், உளவுத்துறை, இணைய பாதுகாப்பு ஆகியவற்றிற்கு வழங்கப்படும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இணையம் மூலம் தீவிரவாத செயல்களுக்கான திட்டங்கள் செயல்படுத்துவதை தடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில், இருதரப்பு, பிராந்திய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மற்ற நாடுகளுக்கு எதிராக தீவிரவாதத்தை பயன்படுத்துவது நிறுத்தப்படவேண்டும். அவ்வாறு தீவிரவாதத்தை பயன்படுத்தும் நாடுகள் உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும்.

தீவிரவாத குழுக்களின் உள்கட்டமைப்புகள் அகற்றப்படவேண்டும். அனைத்து தரப்பிலான ஆதரவுகளும் துண்டிக்கப்படவேண்டும். மற்ற நாடுகளுக்கு எதிராக தீவிரவாத செயல்களை செய்ய, தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவிகள் செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும். தீவிரவாத செயல்களை செய்பவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்படவேண்டும்” என்று பாகிஸ்தானை மறைமுகமாக வலியுறுத்தும்அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்,”தீவிரவாதத்திற்கு எதிராக சர்வதேச சமூகம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது மிகவும் அவசியம். தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு ஐக்கிய நாடுகள் தடைகளை விதிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

கடந்த காலங்களில், தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்துவரும் இந்தியா, தீவிரவாதத்திற்கு ஆதரவளித்துவரும் பாகிஸ்தானை அனைத்தையும் நிறுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான பக்ரைனும் பாகிஸ்தானுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.