பால் விலை உயர்வுக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம்

18-08-2019 04:34 PM

சேலம்,          

எல்லோருக்கும் சம்பளம் உயரும்போது பால் உற்பத்தியாளருக்கும் விலை உயர்வு நியாயம் தானே என பால் விலை உயர்வு குறித்த கேள்விக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலளித்துள்ளார்.

ஆவின் பால் விலை மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28-ல் இருந்து ரூ.32 ஆக, அதாவது லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்படுகிறது.

எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35-ல் இருந்து ரூ.41 ஆக, அதாவது லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது திங்கள்கிழமை (நாளை) முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே பால் விலை உயர்வு குறித்து சேலம் விமானநிலையத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி னர். அதற்கு அவர் பதிலளித்ததாவது, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. உற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்கள், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பால் கொள்முதல் விலை அதிகம். எல்லோருக்கும் சம்பளம் உயரும்போது பால் உற்பத்தியாளருக்கும் விலை உயர்வு நியாயம் தானே?.

பால் வாகன போக்குவரத்து செலவு, தீவன விலை உயர்ந்து உள்ளதால் பால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எதிர்க்கேள்வி எழுப்பினார்.Trending Now: