சட்டப்பிரிவு 370 ரத்து நடவடிக்கை ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிக பலனளிக்கும் : ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

14-08-2019 09:11 PM

புதுடில்லி,

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு தன் சுதந்திர தின உரையை இன்று வழங்கினார். அப்போது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் நாளை 73-வது சுதந்திர தின விழா கொண்டாட உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சிகளில் நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றினார். அதன் விவரம் :

நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு எனது வீர வணக்கம்.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வரவிருக்கும் ஐந்து ஆண்டுகள் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு அறிகுறி என நான் நம்புகிறேன். இந்த கலாச்சாரம் அனைத்து சட்டமன்றங்களுக்கும் பரவ வேண்டும்.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோல், அடுத்த 5 ஆண்டிலும் நாடாளுமன்றம் சிறப்பாக செயல்பட வேண்டும்.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முத்தலாக் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சட்டம் முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்ட நம் மகள்களுக்கு நீதி கிடைக்க வகை செய்யும்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த பகுதி மக்களுக்கு அதிக நன்மைகளை அளிக்கும் என நம்புகிறேன். இந்திய மக்களுக்கு கிடைத்து வரும் உரிமைகள், நலத்திட்டங்கள் அனைத்தும் இனி அவர்களுக்கும் கிடைக்கும்.

தேச கட்டுமானம் என்ற மிக நீண்ட பணியில் இந்த நடவடிக்கை முக்கிய மைல் கல். இந்த நடவடிக்கைக்கான முக்கிய நோக்கம் தனிநபர், குடும்பங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவது தான்.

இன்றைய காலக்கட்டத்தில் ஒரு வெளிப்படையான, அனைத்தையும் உள்ளடக்கிய வங்கி முறை, ஆன்லைன் நட்புகரமான வரி அமைப்பு மற்றும் முறையான தொழில்முனைவோருக்கு மூலதனத்தை எளிதில் அணுகுவது போன்ற வடிவங்களில் நிதி உள்கட்டமைப்பை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்.

இந்தியாவின் வரலாறு மற்றும் விதி, இணைந்து வாழ்வதைக் குறிப்பதாகும்

இந்தியா ஒரு போதும் மக்களின் பலவீனமான குரலை கேட்கும் திறனை இழக்காது. இந்தியா தன் பண்டைய கொள்கைகளை ஒருபோதும் இழக்காது. அதன் நேர்மை உணர்வை மறக்காது.

கோடை விடுமுறையில் 17வது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நிலையான ஆட்சி நடைபெற வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு தேர்தலும் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. ஒவ்வொரு தேர்தலும் இந்தியாவின் கூட்டு நம்பிக்கை மற்றும் நேர்மறை சிந்தனையின் வெளிப்பாடு.

நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் சமூகமும், அரசாங்கமும் குடிமகனும் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும்.

இந்தியர்கள் பலவித ரசனைகள் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களின் கனவு ஒன்றுதான். கடந்த 1947ம் ஆண்டுக்கு முன் இந்தியர்களின் கனவு சுதந்திர இந்தியாவிற்காக இருந்தன. இன்றைய கனவுகள் நாட்டின் விரைவான வளர்ச்சிக்காக, பயனுள்ள மற்றும் வெளிப்படையான ஆளுகைக்காக உள்ளன. இந்த கனவுகளை நிறைவேற்றுவது அவசியம் என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.