அயோத்தி ராமர் பிறந்த இடம் என ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டுள்ளனர் : உச்சநீதிமன்றத்தில் வாதம்

14-08-2019 08:56 PM

புதுடில்லி,

இந்தியாவுக்கு வந்த ஆங்கில வணிகரான வில்லியம் ஃபிஞ்ச் உள்ளிட்ட பல ஆங்கிலேயர்கள் தங்கள் பயண குறிப்பில் அயோத்தியில் தான் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்புகிறார்கள் என எழுதியுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ராம் லாலா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன் தெரிவித்தார்.

அயோத்தியா ராம ஜென்ம பூமி வழக்கின் 6வது நாள் விசாரணை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் நடந்தது.

அப்போது 3 மனுதார்களில் ஒருவரான ‘ராம் லாலா’ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன், ராமர் பிறப்பிடம் குறித்து வாதாடினார்.

அயோத்தியில் தான்  ராமர் பிறந்தார் என இந்துக்கள் முழுமையாக நம்புகிறார்கள். அதன் அடிப்படையிலேயே அயோத்தியா ராமரின் பிறப்பிடமாக அறியப்படுகிறது.

இந்த கருத்து உண்மை என்பதற்கு இந்து புராணங்களில் உள்ள குறிப்புகள் ஆதாரமாக உள்ளன.

அதை தவிர கடந்த 1608 முதல் 1611ம் ஆண்டு வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆங்கில வணிகரான வில்லியம் ஃபிஞ்ச் என்பவர் தன் பயண குறிப்பில் அயோத்தி பற்றி கூறியுள்ளார். அயோத்தி நகரில் ஒரு கோட்டை உள்ளது. அங்கு தான் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்புகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  ‘ஏர்லி டிராவல்ஸ் டு இந்தியா’ (Early Travels to India) என்ற புத்தகத்தில் இந்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதை தவிர ஆங்கிலேய சர்வேயர் மோண்டகமரி மார்டின், கிறிஸ்துவ மிஷினரியான ஜோசப் தைஃபெந்தலெர் உள்ளிட்ட பலரது குறிப்புகளிலும் அயோத்தி தான் ராமரின் பிறப்பிடம் என்று இந்துக்கள் நம்புவதாக கூறியுள்ளனர் என்று வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன் தெரிவித்தார்.

அப்போது பாபர் மசூதி என்ற பெயர் எப்போது வழக்கத்திற்கு வந்தது என வழக்கறிஞர் வைத்தியநாதனிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த வைத்தியநாதன் 19ம் நூற்றாண்டில் தான் அயோத்தியாவில் இருந்த மசூதி, பாபர் மசூதி என அழைக்கப்பட்டது. அதற்கு முன் அவ்வாறு அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை என கூறினார்.

அப்போது முகலாய பேரரசர் பாபரின் வாழ்க்கை சரித்திரத்தை கூறும் பாபர்நாமாவில் (Baburnama) பாபர் மசூதி பற்றி குறிப்பிடவில்லையா ? என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு பாபர்நாமாவில் பாபர் மசூதி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என வைத்தியநாதன் கூறினார்.

இதை முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் தவான் மறுத்தார். பாபர்நாமாவில் முகலாய மன்னர் பாபர் அயோத்தியாவில் உள்ள ஒரு நதியை கடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின் சில பக்கங்கள் காணவில்லை என ராஜீவ் தவான் தெரிவித்தார்.

இறுதியில் இந்த விவகாரத்தில் முதலில் ஆவணச்சான்றுகளை சமர்ப்பித்த பின்னர் வாய்மொழி சான்றுகளை சமர்ப்பிப்பதாக வழக்கறிஞர் வைத்தியநாதன் நீதிபதிகளிடம் கூறினார். அதன் பின் அகழ்வாராய்ச்சி சான்றுகளை தாக்கல் செய்வதாக வைத்தியநாதன் தெரிவித்தார்.

 

 Trending Now: