சென்செக்ஸ் சரிவில் இருந்து மீண்டு 353.37 புள்ளிகள் உயர்வு

14-08-2019 08:12 PM

மும்பை,

இந்திய பங்கு சந்தை செவ்வாய்க்கிழமை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் இன்று சரிவில் இருந்து மீண்டது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் முதலில் 515 புள்ளிகள் உயர்ந்து இறுதியாக  353.37 புள்ளிகளுடன் முடிந்தது. தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிப்டி 103.55 புள்ளி உயர்வுடன் நிலைபெற்றது.

சீனாவின் எலக்டிரானிக் சாதனங்கள் மீதான வரி உயர்வு நடவடிக்கையை அதிபர் டிரம்ப் தள்ளி போட்டதால் இன்று ஆசிய சந்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது.

அதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கும் பொழுதே ஏற்றத்துடன் தொடங்கியது.

சென்செக்ஸ் 0.96 சதவீதம் அதிகரித்து 37,311.53 புள்ளிகளில் நிலைபெற்றது.

அதேபோல் தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 11,000 புள்ளிகளை மீட்டெடுத்தது, 103.55 புள்ளிகள் அல்லது 0.95 சதவீதம் உயர்ந்து 11,029.40 ஆக முடிந்தது.

இன்றைய பங்கு சந்தை நிலவரப்படி வேதாந்தா, டாடா ஸ்டீல், யெஸ் வங்கி, டெக் மகேந்திரா, ஹீரோ, மோடோகார்ப், பாரதி ஏர்டெல், பாரத ஸ்டேட் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி ஆகியவற்றின் பங்குகள் 4.83 சதவீதம் உயர்ந்தன.

அதேசமயம் கோடக் வங்கி, டாடா மோட்டார்ஸ், ஆசியன் பெயிண்ட்ஸ், எஸ்.சி.எல்.டெக், என்.டி.பி.சி, சன் பார்மா மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகியவற்றின் பங்குகள் 4.58 சதவீதம் சரிந்தன.

பணவீக்கத்தில் மிதமான தன்மை மற்றும் அமெரிக்க-சீனா வர்த்தக யுத்தத்தில் ஏற்பட்ட சாதகமான மாற்றம் ஆகியவை சந்தை உயர்வுக்கு காரணமாக அமைந்தன. .

"இந்த புள்ளிகள் குறுகிய காலத்தில் சந்தையின் போக்கை வரையறுக்கப் போகின்றன. அரசின் நடவடிக்கைகளில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அது சந்தையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று ஜியோஜித் நிதிச் சேவைகளின் ஆராய்ச்சித் தலைவர் வினோத் நாயர் கூறினார்.

இதற்கிடையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 13 பைசா அதிகரித்து 71.27 ரூபாயாக உயர்ந்தது.