பூங்காவில் கேளிக்கைகளில் ஈடுபட்டால், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இயலாது: மோடியை விமர்சித்த யெச்சூரி

14-08-2019 08:01 PM

புதுடில்லி

கார்பெட் தேசிய பூங்காவில் கேளிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இயலாது என பிரதமர் மோடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

வனவிலங்கு பாதுகாப்பை மையக்கருத்தாக கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பேர் கிரில்ஸ் உடன் கலந்துகொண்டார். ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படப்பிடிப்பு நடந்தது. அந்த நிகழ்ச்சி, கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி இரவு ஒளிபரப்பானது.

இந்நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சனம் செய்துள்ளார். சீதாராம் யெச்சூரி டுவிட்டரில்,”ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் கேளிக்கைகள் செய்வதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இயலாது.

2014ம் ஆண்டு முதல் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை தீர்க்க எந்த திட்டமும் அரசால் உருவாக்கப்படவில்லை. வெறும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பிளவுபடுத்தும் செயல்களில் மட்டுமே அரசு ஈடுபட்டு வருகிறது” என்று சீதாராம் யெச்சூரி சாடியுள்ளார்.Trending Now: