உலக வர்த்தக நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் : அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

14-08-2019 07:51 PM

மொனாகா, (அமெரிக்கா)

உலக வர்த்தக நிறுவனத்தின் விதிமுறைகளில் சீர்திருத்தங்கள் செய்யாவிட்டால் அமெரிக்கா அந்த அமைப்பில் இருந்து வெளியேறும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை எச்சரித்தார்.

உலக வர்த்தக நிறுவனம் சீனா, இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு வளரும் நாடுகள் என்ற அந்தஸ்தை அளித்து அதற்கான சலுகைகளை கொடுக்கிறது. அமெரிக்காவை நியாயமற்ற முறையில் நடத்துகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். 

இதன் காரணமாக உலக வர்த்தக நிறுவனத்தின் விதிமுறைகளை மதிக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு இல்லை என்றும் கூறி வருகிறார்.

மற்ற நாடுகளுக்கு எதிராக உலக வர்த்தக நிறுவனத்தில் தொடரப்பட்ட பல வழக்குகளில் அமெரிக்கா பெரும்பாலும் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் உலக வர்த்தக நிறுவனத்தில் சீர்திருத்தம் தேவை என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவசியம் ஏற்பட்டால் உலக வர்த்தக நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்று அதிபர் டிரம்ப் நேற்று எச்சரித்தார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் உள்ள ஷெல் ரசாயன ஆலையில் தொழிலாளர்கள் முன்னிலையில் பேசிய அதிபர் டிரம்ப் இதை தெரிவித்தார்.

‘உலக வர்த்தக நிறுவனம் நம்மை பல வருடங்களாக ஏமாற்றி வருவதை நாம் அறிவோம். இனி அவ்வாறு நடக்காது. இந்தியாவும் சீனாவும் இனி வளரும் நாடுகள் அல்ல. அவர்கள் வளர்ந்து விட்டார்கள்.எனவே அதற்கான பயன்களை அவர்கள் அடைய முடியாது’’

‘‘இந்தியாவும் சீனாவும் இந்த பயனை பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். இனி உலக வர்த்தக நிறுவனத்தின் விதிமுறைகளை அவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதிக்காது. இந்த விதிமுறைகளால் நம்மை தவிர அனைவரும் வளர்ச்சியடைகின்றனர்” என்று அதிபர் டிரம்ப் கூறினார்.