நீட் தேர்வு விலக்கு மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்ப ஸ்டாலின் கோரிக்கை

14-08-2019 06:54 PM

சென்னை,

நீட் விவகாரத்தில் கடித நாடகத்தை தொடர வேண்டாம். தமிழ்நாடு சட்டமன்றத்தைக் கூட்டி, நீட் தேர்வு விலக்கு மசோதாக்கள் இரண்டையும் மீண்டும் நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார். 

இன்று ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை விவரம்:

நீட் தேர்வு மசோதாக்கள் மீதான ஒப்புதலை, குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்த விவரத்தை தமிழக சட்டமன்றத்திற்கு தெரிவித்து விட்டோம் என்று கூறி, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த “நீட்“ மசோதாக்கள் தொடர்பான வழக்கினை, அடுத்து நடவடிக்கையின்றி முற்றுப்புள்ளி வைத்து, முடித்து வைப்பதற்கு மட்டுமே அ.தி.மு.க அரசு உதவிசெய்து ஆர்வம் காட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த அவையிலே இரண்டு நீட் மசோதாக்கள் ஏகமனதாக, ஒருமனதாக 1.2.2017 அன்று நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. மசோதாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, திரும்பியே வந்து விட்டன என்ற உண்மையை பேரவைக்கும், பேரவையின் மூலமாக நாட்டுக்கும், தெரிவிக்காமல் மறைத்தனர்.

ஆகவே “கடிதம் எழுதுகிறோம்” என்ற நாடகத்தை இனியும் தொடராமல், ஏற்கனவே வாக்குறுதியளித்தபடி முதலமைச்சர் உடனடியாக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் இரு மசோதாக்களையும் மீண்டும் அவையில் நிறைவேற்ற வேண்டும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்பி வைத்துவிட்டு சும்மா இருக்காமல், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துக்கொண்டு பிரதமரைச் சந்தித்து நீட் மசோதாக்களுக்கு அங்கீகாரம் கிடைக்க நேரில் வலியுறுத்த வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இக்கோரிக்கையை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு, அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.