சிபிஎஸ்.இ தேர்வு கட்டண உயர்வு நடவடிக்கை திரும்ப பெற மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

14-08-2019 06:29 PM

புதுடில்லி,

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்த கட்டண உயர்வை எதிர்த்து டில்லியில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த போவதாகவும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் :
சிபிஎஸ்.இ பொது தேர்வு கட்டணங்களை இருமடங்காக உயர்த்தும் மத்திய அரசின் முடிவு தாழ்த்தப்பட்ட ஏழை மக்களை மிகவும் பாதித்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை தனியார் மயமாக்குவதே மத்திய அரசின் நோக்கம் என்பதை இந்த நடவடிக்கை தெளிவுப்படுத்துகிறது.

தலித் மக்களுக்கு ஆதரவானவர்கள் என கூறிக்கொள்ளும் மத்திய அரசு பின் தங்கியவர்களுக்கு தரமான கல்வி கிடைக்காமல் தடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது என்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி தன் அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.

சி.பி.எஸ்.இ தன் பொதுதேர்வுக்கான கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையால் இந்தியா மற்றும் ஜம்மு காஷ்மீர் இடையே இருந்த பாலம் தீக்கரையாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த ஜனநாயகமற்ற செயலால் ஜம்மு காஷ்மீரில் யாருக்கும் எந்த நன்மையும் ஏற்படாது. பெரும் சீரழிவு தான் ஏற்படும். இந்த விவகாரத்தில் ஜம்மு காஷ்மீர் மக்களுடன் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சி கூறியுள்ளது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்தி இவ்வாறு அறிக்கை வெளியிடுவது இதுவே முதல்முறை.