தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு எச். ராஜா எச்சரிக்கை

14-08-2019 06:20 PM

காரைக்குடி,

இந்து மத உணர்வுக்கு எதிராக செயல்படும் பள்ளிக்கல்வித் துறை இயக்குனரை முதல்வர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர் சுற்றறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் மாணவர்களுக்கு கயிறு கட்டும் போராட்டம் நடத்தப்படும் என பாஜக தேசிய செயலர் எச். ராஜா கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் இன்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தபோது,

பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ண கயிறுகளை கட்டக் கூடாது. நெற்றியில் திலகமிடக் கூடாது. மாணவிகள் கையில் வளையல் அணியக் கூடாது என பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கையில் கயிறு கட்டுவது, நெற்றியில் திலகமிடுவது இந்து பழக்கவழக்கம். இதனால் இயக்குநரின் சுற்றறிக்கையை வாபஸ் பெற வேண்டும். நாங்கள் படிக்கிற காலத்தில் இந்தியா என் தாய் நாடு என பாடப்புத்தகத்தில் உறுதிமொழி இருந்தது.

தற்போது இந்தியா என் நாடு என உள்ளது. இதை ஏன் ? இயக்குநர் கவனிக்கவில்லை.

மற்ற மதத்தினர் மத அடையாளங்களுக்கு ஏன்? இயக்குநர் தடை விதிக்கவில்லை.

இந்து மத உணர்வுக்கு எதிராக செயல்படும் பள்ளிக்கல்வி இயக்குநரை முதல்வர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இந்த சுற்றறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் மாணவர்களுக்கு கயிறு கட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்.ராஜா தெரிவித்தார்.

முதலமைச்சர் கருத்தை வரவேற்கிறேன்

எச்.ராஜா பேசும்போது, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பூமிக்கு பாரம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்த கருத்தை எச்.ராஜா வரவேற்றுள்ளார். 'ப.சிதம்பரம் பூமிக்கு பாரம், சோத்துக்கு கேடு'.. இதை சரியாக கணித்து முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். முதல்வர் என்னை போன்ற விவசாயி. அதனால் கிராமத்து பழமொழியை யதார்த்தமாக கூறியுள்ளார்.

பல ஆண்டுகள் அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் காலணாவிற்கு திட்டம் கொண்டு வந்தாரா? நாட்டிற்கு விரோதமாக பேசி வருகிறார். இதனால் அவர் பூமிக்கு பாரம் தான்.

காஷ்மீர் பிரச்னையில் உலக நாடுகள் இந்திய நாட்டின் முடிவில் தலையிட மாட்டோம் என கூறிவரும் நிலையில் கூட்டணி கட்சிகளை கூட்டி அரசுக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அதை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை.

கார்த்தி சிதம்பரம் அனுபவம் இல்லாத ஊழல் பெருச்சாளி. நீதிமன்றத்தில் இருக்கும் அவரது வழக்குகளை கவனித்து கொண்டாலே போதும். அவர் அரசு பற்றி பேசத் தேவையில்லை. பாஜக, அதிமுக இடையே கணவன், மனைவி போன்று உறவு நீடிக்கிறது. காஷ்மீர் பிரச்னையில் அரசின் நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான எம்பிக்கள் வரவேற்றுள்ளனர். அதேபோல் ரஜினியும் வரவேற்றுள்ளார். தேசப் பக்தி உள்ளோர் ஆதரிக்கின்றனர். பிரிவினைவாதிகள் எதிர்க்கின்றனர் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.