ஆண், பெண் திருமண வயதை சமமாக நிர்ணயிக்க கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு

14-08-2019 06:16 PM

புதுடில்லி,

ஆண் மற்றும் பெண்ணின் சட்டப்பூர்வமான திருமண வயதை சமமாக நிர்ணயிக்க கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய இந்த பொதுநல மனுவை இன்று தாக்கல் செய்தார்.
அதில் இந்தியாவில் பல ஆண்டுகளாக ஆண்கள் 21 வயதில் திருமணம் செய்ய அனுமதிக்கப்படும் நிலையில் பெண்கள் மட்டும் 18 வயதிலேயே திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வயது வித்தியாசம் ஆணாதிக்க சமுதாயத்தின் வெளிபாடு. இதை நியாயப்படுத்த அறிவியல் ரீதியான காரணங்கள் இல்லை என அஸ்வினி குமார் உபாத்யாய தன் மனுவில் தெரிவித்துள்ளார்.

பெண்கள் எப்போதும் தங்கள் கணவரை விட வயது குறைந்தவர்களாக இருக்க வேண்டும். வயதில் பெரியவரான தன் கணவருக்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற சமூக ரீதியான எதிர்பார்ப்பை இந்த வயது வித்தியாசம் வெளிப்படுத்துகிறது. 

மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான திருமண வயதில் உள்ள வேறுபாடு பாலின பாகுபாட்டை வெளிப்படுத்துகிறது. இந்த வயது வித்தியாசம் பாலின சமத்துவம், பாலின நீதி, பெண்களுக்கான மரியாதை ஆகிய கொள்கைகளை மீறுகிறது.

இது உலக நடைமுறைக்கு எதிரானது. எனவே ஆண் மற்றும் பெண்ணின் திருமண வயதை சமமாக நிர்ணயிக்க வேண்டும் என்று அஸ்வினி குமார் உபாத்யாய தன் மனுவில் கோரியுள்ளார்.