சி.பி.எஸ்.இ தேர்வு கட்டணம் உயர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை ஏற்பதாக டில்லி அரசு அறிவிப்பு

14-08-2019 06:02 PM

புதுடில்லி,

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக டில்லியில் அரசு மற்றும் அரசு உதவியுடன் செயல்படும் பள்ளிகளில் படிக்கும் 10ம் 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு கட்டணத்தை டில்லி அரசு முழுமையாக ஏற்கும் என்று துணை முதல்வர் மணிஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொது தேர்வு கட்டணம் 5 பாடங்களுக்கு ரூ.750ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

அதேபோல் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புக்கான பதிவு கட்டணம், பள்ளி மாற்றுவதற்கான கட்டணங்களும் உயர்த்தப்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்தது.

பொது தேர்வு நடத்துவதில் ஏற்படும் 200 கோடி ரூபாய் பற்றாக்குறையை தீர்க்க இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டதாக சிபி.எஸ்.இ. விளக்கமளித்தது.

இந்த புதிய கட்டணங்களின் படி எஸ்.சி. / எஸ்.டி. மாணவர்கள் 5 பாடங்களுக்கு செலுத்தி வந்த ரூ.375 கட்டணம் ரூ.1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

டில்லி அரசின் சிறப்பு சலுகை மூலம் எஸ்சி/எஸ்டி மாணவர்கள் தேர்வு கட்டணத்தில் வெறும் 50 ரூபாய் மட்டுமே செலுத்தி வந்தனர். மீதி கட்டணத்தை அரசு செலுத்தி வந்தது. ஆனால் சிபிஎஸ்.இ இன் புதிய அறிவிப்பின் படி எஸ்சி/எஸ்டி மாணவர்கள் முழு தொகையை கட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் எஸ்சி/எஸ்டி மாணவர்கள் வழக்கம் போல் ரூ.50 மட்டுமே கட்டும் பழைய நடைமுறையை சி.பி.எஸ்.இ அமல்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவியுடன் செயல்படும் பள்ளிகளில் படிக்கும் 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை அரசு முழுமையாக ஏற்கும் என்று டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று அறிவித்தார்.

மேலும் சி.பி.எஸ்.இ தன் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி டில்லி அரசு சி.பி.எஸ்.இ உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மணிஷ் சிசோடியா கூறினார்.